சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ள நாடோடிகள் 2 என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்
வழக்கம்போல் சமூக சேவை செய்யும் ஒரு கேரக்டரான சசிகுமாருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அவரது சொந்த மாமா கூட இப்படிப்பட்ட நபருக்கு பெண் கொடுத்தால் தன்னுடைய மகள் வாழ்க்கை வீணாகிவிடும் என்று பெண் கொடுக்க மறுக்கிறார் இந்த நிலையில் திடீரென அதுல்யா ரவி -சசிகுமார் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து முதலிரவு அன்றுதான் அதுல்யாவின் ரகசியம் சசிகுமாருக்கு தெரிய வருகிறது. அதுல்யாவின் குடும்பத்தினர் ஒரு ஜாதி வெறி பிடித்தவர்கள் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளும் சசிகுமாருக்கு முதலிரவில் தெரியவருகிறது இதனை அடுத்து அதுல்யாவின் பெற்றோர் கொடுக்கும் தொல்லைகளும் அதனை சசிகுமார் சமாளிக்கும் விதம் தான் இந்த படத்தின் மீதி கதை
சசிகுமார் வழக்கம்போல் முதல் பாதியில் தனது ஜாலியான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் சீரியஸாக சாதிவெறிக்கு எதிராக கொந்தளிக்கின்றார். நடிப்பிலும் சரி, உடல்மொழியிலும் சரி சசிகுமார் புதுமையாக எதுவும் இந்த படத்தில் செய்யவில்லை.
அஞ்சலி, அதுல்யா இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இருப்பினும் அஞ்சலியின் கேரக்டரை விட அதுல்யாவின் கேரக்டர் கொஞ்சம் வலிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பரணியின் கேரக்டர் ரசிக்கும் வகையில் உள்ளது
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசையில் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறப்பாக உள்ளது. சமுத்திரக்கனி படம் என்றாலே ஓவர் அட்வைஸ் இருக்கும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் அட்வைஸ் என்பது ஆங்காங்கே இருக்க வேண்டுமே தவிர படம் முழுவதும் அட்வைஸ் ஆக இருந்தால் படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்க படாதா என்பதை சமுத்திரக்கனி உணரவேண்டும். ஏற்கனவே ஒரு சில படங்களில் சமுத்திரகனி ஓவராக அட்வைஸ் செய்தால் தோல்வி அடைந்தார் என்பது தெரிந்தும் இன்னும் அவர் திருந்துவதாக தெரியவில்லை
ஜாதி வெறியை கூறும் சமுத்திரக்கனி ஒரே பக்கம் சாய்கிறாரோ என்ற சந்தேகமும் சில இடங்களில் ஏற்படுகிறது. மொத்தத்தில் சமுத்திரக்கனி தனது அட்வைஸை ஆங்காங்கு மட்டும் தெளித்துவிட்டு திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு ரசிக்கும் வகையான திரைப்படமாக நாடோடிகள் 2’ இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
2.5/5