சமீபத்தில் நடைபெற்ற JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிற்கு சிம்ரன் விருது வழங்கினார். அதன்பின்னர் பேசிய ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்வது தேவையற்றது, அந்தப் பணத்தில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள், கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதை தானம் தர்மம் செய்யப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
ஜோதிகாவின் இந்தக் கருத்துக்கு இந்து மதவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்து பெரிய அளவில் பிரச்சினையினைக் கிளப்பி வந்தனர். நடிகை காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், நடிகை மோனிகா, மதுவந்தி ஆகியோர் இதனைப் பெரிய பிரச்சினை ஆக்கியதோடு, ஜோதிகாவை தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்தவர் என்றெல்லாம் விமர்சித்தனர்.
இருந்தபோதிலும் லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் சேதுபதி, இயக்குனர் சரவணன் ஆகியோர் தங்களது ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் தங்களது ஆதரவினை சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்து இருந்தார். அதாவது அந்த அறிக்கையில் ஜோதிகா எதையும் தவறாகக் கூறவில்லை. ஜோதிகா அவரது கருத்தில் இன்னும் உறுதியாகவே இருக்கிறார். அவர் நிச்சயம் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார்.
இந்தநிலையில், தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில், இன்று ஒரு ஊழியரை பாம்பு கடிக்க, அந்த நபருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் உள்ளே நுழைந்த வனத்துறையினர் அந்த மருத்துவமனையில் 10 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து சென்றுள்ளனர். இந்த செய்தி வெளியானதும் ஜோதிகா கூறிய கூற்று உண்மையே என்று பேசப்பட்டு வருகின்றது.