புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர் நடிகைகள் பின்னாளில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகி வலம் வந்தனர். அப்படி இயக்குனர் ஸ்ரீதர் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் வெண்ணிற ஆடை. இந்தப் படத்தின் மூலம் ஜெயலலிதா, ஸ்ரீ காந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, நிர்மலா போன்றோர் அறிமுகமாகி பின் சினிமாவில் சாதித்தவர்கள்.
இவற்றில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், குண சித்திர நடிகராகவும் நடித்து பெயர் பெற்றார். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோருடனும் நடித்தார். பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் தோன்றி நடிக்க ஆரம்பித்தார். இவர் வில்லனாக நடிக்க சம்மதித்தது யாருக்காக தெரியுமா? இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிக்குத் தான்.
அபூர்வ ராகங்கள் படத்தில் கே. பாலசந்தர் அறிமுகப்படுத்திய போதும் தொடர்ந்து சிறு சிறு வேடங்களிலேயே நடித்தார் ரஜினி. அதன் பின் இவரிடம் உள்ள ஸ்டைல், திறமையை பார்த்து அவரின் நண்பரான கலைஞானம் ரஜினியை ஹீரோவாக வைத்து ‘பைரவி’ என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்கிறார்.
அப்போது முன்னணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்திடம் கலைஞானம் சென்று பைரவி பட விஷயத்தைப் பற்றிக் கூறி பின்னர் ஹீரோ ரஜினி நீங்கள் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே ஸ்ரீகாந்துக்கு கோபம் வந்துவிட்டது. நான் இப்போது தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
பின்னர் கலைஞானம் ரஜினியின் திறமையை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறி ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு ஸ்ரீகாந்த் பைரவி படத்தில் நடிக்க, பின்னர் அந்த படத்தினை கலைப்புலி எஸ். தாணு வாங்கி விநியோகம் செய்தார். படம் சூப்பர் ஹிட் ஆக ரஜினிக்கு இந்த படத்தின் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டதைக் கொடுத்திருக்கிறார்.
அன்று முதல் இந்தப் பட்டம் அவருக்கு நிலையாகிப் போனது. இதே போல் தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் ஜெய்ஷ்ங்கர் முதன் முதலாக ரஜினிக்காக முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ரஜினிக்காக அவரின் வளர்ச்சிக்காக மூத்த நடிகர்கள் பலரும் தங்களது இமேஜை மாற்றி நடித்து அவரை சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் உயர்த்தி இருக்கின்றனர்.