சினிமாவை தொழிலாக பார்க்காமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவருக்கு சினிமாவில் இருந்த பற்றை விட தேசப்பற்று அதிகம் என்று கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவமும் சிவாஜி கணேசன் அவர்களது வாழ்வில் நடந்துள்ளது. 1966 ஆம் வருடம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சோவியத் யூனியன் தலையிட்டால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக அப்போதைய இந்திய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் போருக்காக நிதி திரட்டினார். திரைத்துறையினரிடமும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனால் சமூக சேவகி ராஜி ரங்கராச்சாரி மூலமாக இயக்குனர் சிவி ஸ்ரீதரிடம் கேட்கப்பட்டது. அவர் சிவாஜியிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றுள்ளார். இந்தியா போரிடும் சமயத்தில் எல்லாம் அதிக நிதிகளை வழங்கிய சிவாஜி ஸ்ரீதர் அவர்கள் கூறியதும் நாடகம் ஒன்றின் மூலமாக நிதி திரட்ட முடிவு செய்தார். இதனால் சிவாஜி நடிக்க இயக்குனர் ஸ்ரீதர் அவரது நண்பர் சித்ராலயா கோபவுடன் இணைந்து நாடகம் ஒன்றை தயார் செய்தனர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் விதமாக பல ஊர்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் சுமார் 2 லட்சம் ரூபாய் நிதி வசூலானது.
அந்த சமயத்தில் இயக்குனர் ஸ்ரீதருக்கு தேசத்தையும் தேசப்பற்றையும் மையப்படுத்தி ஒரு படம் எடுக்கலாம் என்று தோன்றியுள்ளது. இது குறித்து ஸ்ரீதரும் கோபுவும் சிவாஜி அவர்களிடம் “தாங்கள் ஒரு ரிட்டையர்டு கர்னால். போர் ஒன்றில் காலை இழந்து விடுவீர்கள். உங்களுக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் ராணுவ அதிகாரி இளைய மகன் வேலை இல்லாமல் சுற்றி விட்டு பின்னர் விமானப்படை பைலட் ஆக மாறுவார். படத்தின் இறுதி காட்சியில் இரண்டு மகன்களும் போரில் உயிரிழந்து விடுவது போன்ற கதை” என்று கூறியுள்ளனர்.
சிவாஜிக்கு தான் ஒரு ராணுவ அதிகாரி என்றதும் மிகவும் பிடித்தமான கதாபாத்திரமாக தோன்றவே உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க முத்துராமன் உள்ளிட்ட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படத்திற்கு நெஞ்சிருக்கும் வரை என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இது கலவரம் நிறைந்த கதை என்பதால் கருப்பு வெள்ளையில் படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து முடிவாகி சிவாஜி கணேசன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகி அமைதி திரும்பத் தொடங்கியது.
இதனால் இந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து அது வெளியானால் அது தேச நலனுக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற கேள்வி சிவாஜி கணேசன் மனதிலும் ஸ்ரீதர் மனதிலும் எழுந்தது. இதையடுத்து நாட்டின் நலன் தான் முக்கியம் என்று முடிவு செய்த சிவாஜி கணேசன் தேசத்திற்காக எத்தனையோ பேர் எவ்வளவோ தியாகம் செய்யும் போது நீ ஒரு கதையையும் நான் ஒரு கதாபாத்திரத்தையும் தியாகம் செய்யக்கூடாதா என ஸ்ரீதரிடம் கேட்டுள்ளார்.
இதன் காரணமாக சிவாஜிக்கு மிகவும் பிடித்தமான கதை கைவிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு அதே நெஞ்சிருக்கும் வரை பெயரில் காதல் கதை ஒன்றை ஸ்ரீதர் மற்றும் கோபு அவர்கள் இணைந்து சிவாஜிகணேசன் அவர்களையும் முத்துராமனையும் வைத்து உருவாக்கினார். அந்த படம் அதிக வசூலை பெறாத நிலையில் சிவாஜி கணேசன் ராணுவ அதிகாரியாக நடிக்க நினைத்த படம் வெளிவந்திருந்தால் நிச்சயமாக அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.