பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் ஐந்தாம் தேதி வெளியான நிலையில் பலருக்கும் அடுத்து கல்லூரியில் எந்தப் படிப்பை தொடரலாம் என்ற கேள்வி உள்ளது.
இதில் பல மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
மாணவர்கள் பலரும் அறிந்த சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங், ஐ.டி இப்படி பல்வேறு பொறியியல் படிப்புகள் உள்ள நிலையில் மாணவர்கள் பலரும் அறிந்திடாத சில அரிய தனித்துவமான பொறியியல் பாடப்பிரிவுகளை பற்றி பார்க்கலாம்.
உலோகவியல் பொறியியல் (Metallurgical Engineering)
உலோகவியல் பொறியியல் என்பது நம் அன்றாட வாழ்க்கையிலும் தொழில்களிலும் பயன்படுத்தக்கூடிய உலோகங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் அந்த உலோகங்கள் மீதான ஆய்வை பற்றியுமான படிப்பாகும்.
சுரங்க பொறியியல் (Mining Engineering)
சுரங்க பொறியியல் என்பது இயற்கை வளத்திலிருந்து கனிமங்களை எப்படி பிரித்து எடுப்பது கையாள்வது என்பது குறித்த படிப்பாகும்.
தொழில்துறை பொறியியல் (Industrial Engineering)
தொழில்துறை பொறியியல் என்பது தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை மேம்படுத்துவது அதை செயல்படுத்துவது நிர்வகித்து கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் திறமையான வழியில் கவனம் செலுத்தும் பொறியியலின் ஒரு பிரிவாகும்.
ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo Informatics)
புவியியல் தகவல்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பற்றிய படிப்பு.
சுற்றுச்சூழல் பொறியியல் (Environmental Engineering)
சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை சரி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த படிப்பு ஆகும்.
பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் (Petrochemical Engineering)
இது வேதியியல் பொறியியலின் ஒரு பிரிவு. இது பெட்ரோ கெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கை தொழில்நுட்பத்தை பற்றிய பாடப்பிரிவு.
ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (Rubber and plastic Technology)
ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுடன் தொடர்புடைய பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உற்பத்தி ஆகியவற்றை சார்ந்த ஒரு பாடப்பிரிவு.
உணவுத் தொழில்நுட்பம் (Food Technology)
உணவுத் தொழில்நுட்பம் என்பது உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நுட்பங்களை கவனம் செலுத்தும் ஒரு துறை.
அச்சுத் தொழில் நுட்பம் (Printing technology)
அச்சு இயந்திரம் நிர்வகிக்க விரும்புபவருக்கு இந்த அச்சுத் தொழில்நுட்பம் என்பது மிகவும் சிறந்த நம்பகமான ஒரு படிப்பாகும்.
டெக்ஸ்டைல் வேதியியல் (Textile chemistry)
B.tech டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி ஜவுளி பொருட்களை பற்றியும் நார், ஜவுளி பதப்படுத்துதல், நெசவு , சாயம் பூசுதல், ஈரப்பதப்படுத்துதல் போன்றவற்றைப் பற்றிய பாடப்பிரிவு.