Sani Peyarchi: 2025 ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவானின் ராசி மாற்றத்தால் 2025ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி தொடங்குகிறது. மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து மூன்றாம் வீட்டிற்கு முயற்சி சனியாக இடம் மாறுகிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு பாத சனி, மீனம் ஜென்ம சனி என 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சனியினால் பலன்கள் நடைபெறும்.
ஏழரை சனி பாதிப்பு:
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். நிகழப்போகும் சனிப்பெயர்ச்சி கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய மேஷம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
மேஷம்:
2025ஆம் ஆண்டு முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. விரைய சனி காலம். ஏழரை சனி காலத்தில் தொழில் முதலீடுகளில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு யாருக்கும் பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம் ஆபத்தாகி விடும். விரைய சனி பொதுவாகவே நிறைய செலவுகளை கொடுப்பார் எனவே சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வீடு, நிலம் என அசையா சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது. வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவுக்கு வரப்போகிறது. ஏழரை ஆண்டு காலம் கஷ்டத்தை சந்தித்த மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நிறைய வருமானத்தை தரப்போகிறார். 2025ஆம் ஆண்டு முதல் விடிவு காலம் வரப்போகிறது. சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார். கடன் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்கப்போகிறார் சிவ ஆலயம் சென்று சனீஸ்வர பகவானையும், பைரவரையும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வந்தால் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்:
ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டில் பாத சனியாக தொடர்கிறார். பொறுமையும் நிதானமும் தேவை. சொந்த பந்தங்களிடம் ஏற்பட்ட பகை விலகும். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்ப சனி என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். வீண் வம்பு வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதால் சங்கடப்பட வேண்டாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமி அம்மனையும் வணங்கலாம். சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம் பொதுவாகவே ஜென்ம சனி காலத்தில் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து செல்லும். குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பது சிரமம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஏழு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். என்பதால் தேனி மாவட்டம், சின்னமனு}ர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.