சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும் புதன் விருச்சிக ராசியிலும் சுக்கிரன் மகர ராசியிலும் சனி கும்ப ராசியிலும் ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணத்தால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்க்கலாம்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான உறுதி செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். பிரச்சினைகள் நீங்கும். பொறுமையாக இருங்க நல்லது நடக்கும். குருவின் பரிபூரண அருள் கிடைத்திருக்கிறது. பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். இந்த மாதம் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
கன்னி
அறிவின் நாயகன் புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் வெற்றிகள் தேடி வரும். பணவரவு அதிகமாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும். புனித யாத்திரை செல்வீர்கள். வெளியூர் பயணம் சந்தோஷத்தை தரும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் பெற்றோர்களுடன் சண்டை எதுவும் போட வேண்டாம். மனதில் இருந்த பாரங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உங்களுக்கு இந்த மாதம் வெற்றிகள் தேடி வரப்போகிறது. புதன்கிழமை பெருமாளையும் தாயாரையும் வணங்க நன்மைகள் நடைபெறும்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் உறவினர்களிடம் கோபத்தை காட்டி உறவுகளை சிதைத்து விடாதீங்க. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து பண வரவை அதிகரித்துக் கொள்வீங்க. உங்க ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டினை பார்க்கிறார். தொழிலில் லாபம் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகமாக வரும். அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வரலாம். தடைபட்டிருந்த பதவி உயர்வுகள் தேடி வரும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். மார்கழி மாதம் மனதிற்கு மகிழ்ச்சியான மாதமாக அமையப்போகிறது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் சகல நன்மைகளும் கிடைக்கும்.
விருச்சிகம்
பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. இந்த மாதத்தில் உங்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பேசும் வார்த்தைகளில் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை சொல்லும் எனவே பேசும் முன் நிதானம் அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குரு பகவானின் பார்வை மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.