அதிகாரத்தில் உள்ள அனைவரையும் நண்பர்களாக வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த வருடம் ஜென்ம சனி காலமாக துவங்குகிறது.
நீங்கள் இந்த வருடத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் வரை கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மது அருந்துவதை கைவிட வேண்டும்.
சனியின் குருவாக இருக்கும் காலபைரவரை வழிபட வேண்டும். கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் பின்வரும் ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும் அல்லது 108 முறை எழுதி வர வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலமாக உங்களுடைய தினசரி வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
மனிதராக பிறந்த யாராக இருந்தாலும் 30 ஆண்டுகளில் ஏதாவது ஒரு பத்து ஆண்டுகள் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். கலியுகத்தில் நாம் ஒவ்வொருவரும் போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தின் தொகுப்பை அனுபவிக்கவே பிறவி எடுத்திருக்கின்றோம். அதில் ஜென்மச்சனி காலத்தில் போன நான்கு பிறவிகளில் செய்த பாவ வினைகளின் தொகுப்பை அனுபவிக்க பிறந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
எந்த ஒரு துயரம் / அவமானம் / கஷ்டம் நமக்கு வந்தாலும் அதற்கு நாம் மட்டுமே காரணம் என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிய காலமே இந்த ஜென்ம சனி காலமாகும். இருந்தபோதிலும் திருந்த வேண்டும், மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ஈசன் சித்தர்கள் மூலமாக பல்வேறு உபதேசங்கள், வழிபாட்டு முறைகள், பூஜைகள், வழிபாடுகளை சொல்லி இருக்கிறார்.
சனி பகவானின் குரு காலபைரவர் ஆவார். காலபைரவரை தினமும் துதித்து / வழிபட்டு வர சனி பகவான் பெருமகிழ்ச்சி அடைந்து அவர் தரும் துன்பங்களை குறைத்துக் கொள்வார்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ’ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமக’ என்ற மந்திரத்தையும்,
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமக’ என்ற மந்திரத்தையும்,
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் அஸிதாங்க பைரவாய நமக’ என்ற மந்திரத்தையும் ஜெபித்து வரவேண்டும் அல்லது எழுதி வர வேண்டும் .
கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் யாருக்காவது கடன் வாங்கி கொடுத்திருந்தால் அல்லது ஜாமீன் எடுத்து போட்டு இருந்தால் இப்பொழுது அதன் மூலமாக நிம்மதியற்ற வாழ்க்கை வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இருந்தபோதிலும் நீங்கள் பைரவ மந்திரம் ஜெபிக்கலாம் அல்லது உங்கள் ஊரில் உள்ள பழமையான கோவிலுக்குள் வன்னி மரம் இருந்தால் அதை சனிக்கிழமை தோறும் 8 முறை வலம் வரலாம் அல்லது உழவாரப் பணியில் ஈடுபடலாம் அல்லது சனி பிரதோஷம் அன்று (18.2.2023, 4.3.2023, 1.7.2023, 15.7.2023, 6.4.2024) அண்ணாமலை கிரிவலம் சென்று மாலை 4:30 மணிக்கு எட்டாவது லிங்கமான ஈசன் லிங்கத்தில் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்யலாம். இதில் ஏதாவது ஒன்றை செய்து வருவதன் மூலமாக ஜென்ம சனியால் வரக்கூடிய துயரங்கள் பெருமளவு குறையும் என்பது உறுதி.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.