ஓரைகளில் செய்ய வேண்டியவை!

By Staff

Published:

ஒவ்வொரு நாட்களில் அந்த கிழமைக்குரிய கிரகம் ஆதிக்கம் செய்யும். ஆனாலும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாட்களில் வரும் கிரகம் கிழமைக்குரிய கிரகத்தோடு சேர்த்தே பகுத்து தந்துள்ளார்கள். ராகு கேதுவிற்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை. இதற்கான கிரக நேர அட்டவணை தினசரி நாட்காட்டிகளில் அச்சிட பட்டுள்ளது. அந்த கிரகத்தின் ஓரையில் செய்ய வேண்டிய சுப நிகழ்ச்சிகள் மற்றும் தவிர்க்க வேண்டியவற்றை விரிவாக காணலாம்.

77681012fc0c8be58e460f90890ae031

அன்றைய தின சுப நாட்கள், கரி நாள், சந்திராஷ்டமம் போன்றவற்றை தினசரி அட்டவணை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். ஏதேனும் புதிதாக தொடங்குவது, சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எப்பொழுது நடத்துவது என்று ஜோதிடரின் ஆலோசனை படி செய்து கொள்ளுங்கள்.

சூரியன் ஓரையில் செய்ய வேண்டியவை:

அரசு சம்மந்தமான முயற்சிகள் யாவும் இந்த ஓரையில் செய்யலாம். வேலை விண்ணப்பம் செய்வது, புதிய வேலை முயற்சி செய்வது, வேலை ஒப்பந்தங்கள் கையெழுத்து போடுவது எல்லாம் இந்த ஓரையில் செய்யலாம். தந்தை, தந்தை வழி பிதாமகர் ஆசி மற்றும் வாழ்த்துகள் பெறலாம். புதிய பொறுப்புகள், பதிவுகள், அரசு தலைவர்களை சந்திப்பது, அரசு சம்மந்தமான உதவிகள் எல்லாம் இந்த ஓரையில் செய்யலாம். நாட்டுப்பணி, சமூகப்பணி போன்றவற்றை இந்த ஓரையில் செய்யலாம். புதிய மருந்து சாப்பிடுவதும் இந்த ஓரையில் தொடங்கலாம்.

சந்திரன் ஓரையில் செய்ய வேண்டியவை:

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவது, அணிந்து கொள்வது எல்லாம் செய்யலாம். வியாபாரம், புதிய பொருட்கள் பயன்படுத்துவது, புதிய ஆடை உடுத்துவது, பெரிய பிரயாணங்கள் ஈடுபடலாம். உணவு பொருட்கள் விற்பது, வாங்குவது, தொழில் செய்வது எல்லாம் தொடங்கலாம். திருமணம், வேலை, தொழில், வியாபாரம் எல்லாம் செய்யலாம். நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள், மீன், காய்கறி, கப்பல், படகு வாங்குவது செய்யலாம். சந்திரன் ஓரையில் மேலே கூறியதை விற்கவும் செய்யலாம்.

சுக்ரன் ஓரையில் செய்யத்தக்கவை:

சுக்ரன் ஓரையில் ஆடை, ஆபரணம் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை விற்கக்கூடாது. வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவது இந்த ஓரையில் செய்யலாம். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடலாம். பெண் பார்க்க செல்வது, விழாக்கள் நடத்துவது, கலை, நாட்டியம், நாடகம், திரைப்படம் முதலியவற்றில் ஈடுபடலாம். மேலே கூறிய கலைகள் கற்பிக்கலாம். அழகு சம்பந்தமான பயற்சி, போட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளலாம். புதிய வியாபாரம், தொழில், சுப நிகழ்ச்சிகள் சுக்ரன் ஓரையில் செய்யலாம்.

செவ்வாய் ஓரையில் செய்ய வேண்டியவை:

செவ்வாய் ஓரையில் புதியதாக மருந்து சாப்பிடுவது, மருந்துகள் உற்பத்தி, விற்பனை, அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பூமி சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்துவது, நிலம் வியாபாரம் போன்றவற்றை செய்யலாம். யந்திரம், மந்திரம் போன்றவற்றை இந்த ஓரையில் செய்யலாம்.

புதன் ஓரையில் செய்ய வேண்டியவை:

படிப்பு கல்வி தொடங்குதல், வித்தைகள், ஆடை, புது ஆபரணங்கள் வாங்குவது, வியாபாரம் செய்வது போன்றவற்றை செய்யலாம். புத்தகம் வெளியிடுவது, அச்சிடுவது போன்றவற்றை செய்யலாம். முக்கியமான செய்திகள் பரிமாறிக்கொள்வது போன்றவற்றை செய்யலாம். புதிய பொறுப்பு, சுபநிகழ்ச்சியின் பேச்சுவார்த்தை, கல்யாணம் சம்பந்தப்பட்டவை செய்யலாம்.

குரு ஓரையில் செய்ய வேண்டியவை:

குரு ஓரையில் அனைத்து சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். புது ஆடை, ஆபரணங்கள் வாங்குவது, வியாபாரம் தொடங்குவது, கல்வி சம்பந்தமான முயற்சி செய்யலாம். ஆன்மீகப் பயணங்கள், பிரயாணம், சுற்றுலா செல்லலாம். பதவி ஏற்றல், பொறுப்புகள் ஏற்றல் போன்றவற்றை செய்யலாம். குரு, மகான்களை இந்த ஓரையில் சந்திக்கலாம்.

சனி ஓரையில்  தவிர்க்க வேண்டியது:

சனி ஓரையில் எந்த வித புதிய முயற்சிகளையும், காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. இந்த ஓரையில் கல்வியில் சேருவது, விண்ணப்பம் கொடுப்பது எல்லாம் தவிர்த்திடலாம். மீறி செய்தால் தடை, சிக்கல், செய்யும் காரியங்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

Leave a Comment