இந்து மத நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் முக்கியப் பங்கு ஆற்றுவது ஜோதிடம். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் இந்து மதத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாக நல்ல நேரம், சகுணம் பார்த்துத் தொடங்குவதுதான் வழக்கம். ஆனால் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாழிகையே நல்ல நேரமாக அமைகிறது. மேலும் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ப சில காரியங்களை இந்நாளில் செய்யலாம்.. செய்யக் கூடாது என ஜோதிடம் கூறுகிறது. இது வானியல் சாஸ்திர அறிஞர்களால் கணிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு நாளும் நாம் சோதிட அறிவியலை அடிப்படையாகக் கொண்டே கடக்கிறோம். அப்படி வரும் நாட்களில் ஒன்று தான் சந்திராஷ்டமம். பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு மத்தியில் சந்திராஷ்டமம் ஏன் ஏற்படுகிறது. இது என்ன செய்யும்? இதற்குரிய எளிய பரிகாரங்களைப் பற்றிப் பார்ப்போமா?
சோதிடவியலில் பொதுவாக ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு ராசயில் சஞ்சரிப்பதற்கு காலம் நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளது. அதின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 54 மணி நேரம், அதாவது இரண்டரை நாட்கள் வாசம் செய்வார். இவ்வாறு ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரின் மேற்கண்ட கால அளவு சஞ்சாரம் செய்கின்ற நேரத்தையே சந்திராஷ்டமம் என்று சோதிடம் கூறுகிறது. 27 நட்சத்திரக் காரர்களும் 25 நாட்களுக்கு ஒருமுறை சந்திராஷ்டம காலத்தினைக் கடந்தே செல்கிறோம்.
பஞ்சாங்கத்தில் சூலம் இவ்வளவு முக்கியமானதா? அவசியம் இதப் பார்த்துத் தான் ஆக வேண்டுமா?
பொதுவாக சந்திராஷ்டம தினத்தன்று நீண்ட தூரப் பயணம், புதிய பொருள் வாங்குவது, புதிய காரியம் தொடங்குவது ஆகியவை செய்யக் கூடாது. ஏனெனில் சந்திராஷ்டம தினத்தன்று மன உளைச்சல், குழப்பம், கோபம், எரிச்சல் இவையெல்லாம் கூடிவரும் என்பதால் சோதிடம் இவ்வாறு சந்திராஷ்டம தினத்தன்று எதையும் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறது.
நமது உடலில் சந்திரன் வாசம் செய்வது ஓடும் இரத்தத்தில்தான். எனவே சந்திராஷ்டம நாளில் எரிச்சல் போன்றவை உருவாவதால் இரத்தக் கொதிப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சந்திராஷ்டம நாட்களில் கோபம், எரிச்சலைத் தவிர்க்க வேண்டும். இதற்கு என்னதான் பரிகாரம் என்றால் சந்திரனுக்குரிய பொருளான பாலை சிறிதளவு குடித்து விட்டு காரியத்தைத் துவங்குவதால் சந்திராஷ்டமத்தின் வீச்சு அறவே குறையும். மேலும் அந்நாளில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து விட்டு வேலையைத் துவங்கலாம். மேலும் குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலமும் சந்திராஷ்டமத்தின் பிடியிலிருந்து தப்பலாம்.