2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டுவார்கள். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளாலும் ராகு, கேதுவின் புண்ணியத்தாலும் நன்மைகள் நடைபெறப்போகிறது. பணமழையில் நனையப்போகின்றனர்.
துலாம்:
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் மாற்றமும் அற்புதமாக அமையப்போகிறது. கடந்த காலங்களில் அஷ்டம குரு, ஆறாம் இட ராகு பயணத்தால் பல சிரமங்களை பட்டிருப்பீர்கள். இனி எல்லாம் சுகமே என்பது போல 2025ஆம் அமையப்போகிறது.
சனி பெயர்ச்சி:
சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம். அந்த வீட்டில் சனிபகவான் அமரப்போவது சிறப்பு. எதிரிகள் தொல்லை ஒழியும் கடன் பிரச்சினைகள் தீரும். இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். 2025ஆம் ஆண்டில் தொட்டதெல்லாம் வெற்றியாகும். தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சனி பகவான் அள்ளித்தரப்போகிறார்.
குரு பெயர்ச்சி:
2025ஆம் ஆண்டில் உங்களின் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கடன்கள் தீரும். குடும்பத்தில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். அஷ்டமத்தில் குரு பயணம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு லாபத்தை அள்ளித்தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். சுப செய்திகள் தேடி வரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கும் தம்பதியினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். அக்டோபர் மாதத்தில் குரு பகவான் அதிசாரமாக 10ஆம் வீட்டிற்கு வந்து சில மாதங்கள் பயணம் செய்வதால் வேலை தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி:
ராகு 6ஆம் வீட்டிலும் கேது 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திலும் மே மாதம் வரை பயணம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எத்தனையோ விசயங்களில் ஏமாந்து போயிருப்பீர்கள். அதை எல்லாம் படிப்பினையாக எடுத்துக்கொண்டு இனி கவனமாக இருங்கள். 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உங்களிடம் பணம் கடனாக வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் தேடி வந்து பணத்தை கொடுத்து விட்டு போகும் காலம் தேடி வரப்போகிறது.
மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. எத்தனையோ நல்ல காரியங்கள் கடந்த காலங்களில் நிறைவேறாமல் போயிருக்கும். புத்தாண்டில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.