புத்தாண்டு ராசி பலன் 2025 – தலைமேல் அமரப்போகும் ஜென்ம சனி.. மீன ராசிக்காரர்கள் கவனம்!

2025 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகள் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? ஜென்ம சனி, குரு பெயர்ச்சியின் பலன்கள், ராகு கேதுவின் பாதிப்புகள், பரிகாரங்கள் என மீன ராசிக்காரர்களுக்கான முழுமையான 2025 ஜோதிட ஆண்டு பலன் இங்கே.

meenam new year rasi palan 2025

2025 புத்தாண்டிலாவது நமக்கு நல்லது நடக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பார்கள். திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டுவார்கள். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மீனம்

ஏழரை சனி காலத்தில் ஜென்ம சனி தொடங்கப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 3,4,5ஆம் இடங்களில் 2025ஆம் ஆண்டு பயணம் செய்யப்போகிறார். ஜென்ம ராகு விலகப்போகிறது. களத்திர கேது விலகப்போவதால் பாதிப்புகள் குறையப்போகிறது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அதிக அளவில் பண விரையத்தை பார்த்திருப்பீர்கள். அதில் சில சுப விரையமாக கூட இருக்கலாம். புத்தாண்டில் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறப்போகிறது.

சனி பெயர்ச்சி

சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்து ஜென்ம ராசிக்கு வந்து அமரப்போகிறார். 2025ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் சனி பெயர்ச்சி நிகழப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்குள் வந்து அமரப்போகிறார். ஜென்ம சனி காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பண விசயங்களில் அதிக கவனம் தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யும் முன்பாக முன் யோசனை செய்வது அவசியம். ஜென்ம சனியை எதிர்கொள்ள மனதளவிலும் உடல் ரீதியாகவும் தயாராகுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. யாரை நம்பியும் பணத்தை கடன் வாங்கி தர வேண்டாம். பண விசயத்தில் உறவினர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடாதீர்கள்.

குரு பெயர்ச்சி:

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்வார். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீடு, 9ஆம் வீடு 11ஆம் வீடுகளின் மீது விழுவதால் குரு பலன் உள்ளது. திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்கும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். குருபகவான் மே மாதத்திற்குப் பிறகு 4ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பார்வை பலன்

சுக ஸ்தான குரு உங்கள் ராசிக்கு 8,10,12ஆம் வீடுகளை பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும் வருமானத்தை பத்திரப்படுத்துங்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போவதால் அற்புதமான மாற்றங்கள் நிகழப்போகிறது. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. குரு பலன் வரப்போவதால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது.

ராகு கேது பெயர்ச்சி

2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் ராகு உங்கள் ராசியில் ஜென்ம ராகுவாகவும் கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர கேதுவாகவும் பயணம் செய்கின்றனர். மன குழப்பம் நீடிக்கும். உங்களுடைய வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சின்னச் சின்ன பிரச்சினைகளை ஊதி பெரிதாக்க வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மே மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி 12ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

பரிகாரம்:

மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஜென்ம சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெற வேண்டுமெனில் சனிக்கிழமை சனி ஹோரையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஜென்ம ராகு நீங்கும் வரைக்கும் ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது பாதிப்புகளை குறைத்து நன்மையை அதிகரிக்கும்.