புத்தாண்டு ராசி பலன் 2025 – கும்பத்தை விட்டு விலகும் ஜென்ம சனி.. குருவால் கொட்டும் பணமழை!

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படும் நன்மைகள், பாதகங்கள், குரு பார்வை பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் மற்றும் பொருளாதார நிலைமை பற்றிய முழுமையான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.

kumbam new year rasin palan 2025

2025 புத்தாண்டிலாவது நமக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டுவார்கள். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன நன்மைகள் நடைபெறப்போகிறது? பொருளாதார நிலை உயருமா? என்று பார்க்கலாம்.

கும்பம்:

கடந்த 5 ஆண்டு காலமாகவே கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியால் படாத பாடு பட்டிருப்பீர்கள். ஜென்ம சனி விலகப்போவதால் இழந்ததை மீட்பீர்கள். புத்தாண்டு பிற்பகுதியில் இருந்து குரு பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவது சிறப்பு ராகு, கேதுவும் சாதகமான இடத்தில் பயணம் செய்யப்போவதால் நல்ல காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

சனி பெயர்ச்சி

2025ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியை விட்டு விலகப்போகிறார். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவிற்கு வரப்போகிறது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். பிசினஸ் முதலீடுகளில் அகலக்கால் வைக்காதீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானம் தேவைப்படும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடி வரும் காலம் வரப்போகிறது.

குரு பெயர்ச்சி: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மே மாதம் வரை குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், அஷ்டம ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குரு பகவான் மே மாதத்திற்கு மேல் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போவது சிறப்பு. குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழப்போகிறது. அதோடு உங்கள் ராசிக்கு 9ஆம் வீடு, 11ஆம் வீடுகளின் மீதும் விழுவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

குரு பார்வை பலன்

குரு பகவான் அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது கிடைப்பதால் பண வருமானம் வரும். குருவின் பயணம் 2025ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு
சாதகமாகவே இருக்கப்போகிறது. அதே நேரத்தில் அக்டோபர் மாதத்தில் அதிக கடன் வாங்க வேண்டாம். குரு பகவான் கடனை அதிகரிப்பார். வரப்போகும் வருமானத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி

2025ஆம் ஆண்டில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்கின்றனர். அள்ளிக்கொடுப்பார் ராகு அதே நேரத்தில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். எந்த விசயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மே மாதத்திற்கு மேல் ராகு பகவான் உங்கள் ராசியில் வந்து ஜென்ம ராகுவாக அமரப்போகிறார். கேது ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். ஜென்ம சனி விலகி விட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடும் அதே நேரத்தில் ஜென்ம ராகு வந்து அமர்கிறார். சில நேரங்களில் குழப்பங்கள் மன குழப்பங்கள் ஏற்படும். கேது ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வாழ்க்கை துணையுடன் தேவையற்ற விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சாதக பாதகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரை சனி நீடிப்பதால் சனிக்கிழமை சனி ஹோரையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதே போல ஜென்ம சனி காலத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுவது நல்லது.