புத்தாண்டு ராசி பலன் 2025: தனுசு, மகரம், கும்பம், மீனம் – யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம்

2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம்…

NEW YEAR 2025 14

2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம் ஆண்டில் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். அர்த்தாஷ்டம சனி காலமாகும். தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குருவின் பயணம் சாதகமாக உள்ளது. மே மாதத்திற்குப் பிறகு குரு பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு சாதகமும் பாதகமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கவனம் தேவை.

மகரம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. நீங்கள் கடந்த ஏழரை ஆண்டு காலமாக பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகின்றன. ஏழரை சனி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடியப்போகிறது. சனி பகவான் மூன்றாம் வீட்டிற்கு செல்லப்போவதால் உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது. குரு பகவானின் பயணமும் சாதகமான நிலையில் உள்ளதால் பொருளாதார நிலை மேம்படும். ஆண்டு முழுவதும் குரு பலன் உள்ளதால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. ராகு, கேது இடப்பெயர்ச்சியால் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

கும்பம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜென்ம சனி முடிவிற்கு வந்தாலும் பாத சனியாக நீடிக்கிறது. குரு பகவானின் பயணம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பண வருமானத்திற்கு குறைவிருக்காது. ஆண்டின் பிற்பகுதியில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பொருளாதார நிலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். கும்ப ராகு குடும்பத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தப்போகிறார். ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் கேது பகவான் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். குல தெய்வ வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும்.

மீனம்:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள ராகு ஆண்டின் பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் ராகு. கேதுவின் பயணமும் ஆறாம் வீட்டிற்கு இடம் மாறப்போகிறது. ஏழரை சனி காலத்தில் ஜென்ம சனி தொடங்கப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசியில் வந்து அமர்ந்து பயணம் செய்யப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது. ராசி நாதன் குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் சொத்து சேர்க்கையும் ஏற்படும். நிலம் வீடு வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டமும், செல்வ செழிப்பும் நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையப்போகிறது கொண்டாடத் தயாராகுங்கள்.