80, 90களில் தமிழ்சினிமாவில் வலம் வந்த நகைச்சுவை நடிகர்களில் நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முக்கிய பங்குண்டு.
பாலச்சந்தர் அவர்களால் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 82ம் ஆண்டு சார்லி அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோகர் என்ற இயற்பெயருடைய சார்லி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்தவர். படித்த பட்டதாரி தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை 1994ல் வாங்கியவர்.
1996ம் ஆண்டில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை வாங்கியவர். ரஜினி, கமல், விஜயகாந்த் தொட்டு அதற்கு அடுத்த விஜய், அஜீத் காலத்திலும் கல்லூரி மாணவனாக நடித்தவர்.
முகபாவனைகளாலும், பேசும் விதத்திலும் சிரிக்கவைப்பவர். சார்லியை நன்றாக சினிமாவில் பயன்படுத்தியவர் இயக்குனர் விக்ரமன் அவர்கள்.
விக்ரமனின் முதல் படம் புதுவசந்தம் தொட்டு பூவே உனக்காக, உன்னை நினைத்து போன்ற படங்களின் வெற்றிக்கு சார்லியும் ஒரு முக்கிய காரணம்.
ஜோதிடர் மெ. மெய்யப்பன் என பெயர் வைத்துக்கொண்டு பேட்ரி போடல என பம்முவதாகட்டும், ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் பேட்டரி இல்லாமலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு சமாளிப்பதாகட்டும் பார்ப்பவர்களுக்கு குபீர் சிரிப்பை வர வைப்பவை.
வீட்ல ஃபேன் இருக்கா என கேட்கும் மதன்பாப்பிடம் வீடு புல்லா ஃபேன்ஸா இருக்கு எனச்சொல்லி இவர் ரஜினி ஃபேன் இவர் கமல் ஃபேன் இந்த வீட்டு ஓனர் வி.எஸ். ராகவன் ஃபேன் என சொல்லும் காமெடியை அடித்துக்கொள்ளவே முடியாது.
வித்தியாசமான ரோல்கள் செய்வது சார்லிக்கு கை வந்த கலை. மலையாள இயக்குனர் மது அவர்கள் இயக்கி மம்முட்டி நடித்து இசைஞானிஇளையராஜா இசையில் வந்த வெற்றிப்படம்தான் மெளனம் சம்மதம். இந்த திரைப்படத்தில் சார்லிக்குத்தான் வெயிட்டான வேலைக்காரன் பாத்திரம் படத்தின் திருப்புமுனைக்கு காரணமாக இருக்கும்.
சார்லியின் நடிப்பில் சிறப்பாக அமைந்த படம் வருஷம் 16. இயக்குனர் ஃபாஸில் அவர்களின் பேவரைட் சார்லிதான் பூவே பூச்சூடவா தொடங்கி ஃபாஸிலின் அனைத்து படங்களிலும் ஒரு சிறிய ரோலிலாவது சார்லி நடித்து விடுவார்.
அரங்கேற்ற வேளை படத்தில் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் பாடலிலும், பூவிழி வாசலிலே படத்தில் அண்ணே அண்ணே பாடலிலும் சிறிய வேடத்தில் ஒரு நிமிடமாவது வந்து செல்வார். நகைச்சுவை வேடம் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்து வாங்குபவர் சார்லி.
வெற்றிக்கொடி கட்டு படத்தில் வெளிநாடு செல்ல காசு கொடுத்து ஏமாறும் அப்பாவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சில வருடம் முன்பு வந்த ஜீவா, கிருமி படங்களில் கூட உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து கண்கலங்க வைத்திருப்பார்.