இறைவன் சக்தி குறித்து வாரியார் ஸ்வாமி சொன்ன கதை

By Staff

Published:

d85aad2ab90c58d317c3a378f2a5c6e2

அன்றைய காலத்தில், திருவிழாக் காலங்களில், தெருமுனை மேடைகளில் அமர்ந்து சமயம் வளர்த்த செம்மல்… ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்’

தனது உபன்யாசத்திற்கு நடுவே உபகதைகளைக் கூறுவதும்… கேள்விகளுக்கு பதிலளிப்பதும்… மீ்ண்டும் உபன்யாசத்திற்குள் வரும் போது, விலகிச் சென்றப் பகுதியைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு, சிவபுராணம், கந்த சஷ்டி கவசம் என்று, புத்தகங்களைப் பர்சிசளிப்பதும் அவரின் வழக்கமாக இருந்தது.

கேள்விகளைக் கேட்பவர்கள் எந்த மனோ நிலையில் இருந்தாலும் (ஆத்திகராகவோ அல்லது நாத்திகராகவோ), வாரியார் சுவாமிகளின் பதில் அவர்களின் மனோ கதியை ஒட்டியே அமைந்திருக்கும்.

ஒருமுறை, ‘எல்லா இடத்திலும்தான் கடவுள் நிறைந்திருக்கிறார்… என்று கூறுகிறிர்கள். அப்படி இருக்கும் கடவுளுக்கு எதற்காக, தனியாக ஒரு கோவில் கட்டிக் கும்பிடச் சொல்கிறிர்கள் ?’ என்ற கேள்வி ஒருவரிடம் இருந்து எழுந்தது.

வாரியார் சுவாமிகள் : ‘நீங்கள் இங்கு எந்த வாகனத்தில் வந்தீர்கள் ?’

கேள்வி கேட்டவர் : மிதி வண்டியில்…

சுவாமிகள் : நீங்கள் வீட்டுக்குப் போகும் போது, மிதிவண்டி டியூபிலிருக்கும் காற்றை வெளியேற்றி விட்டுச் செல்வீர்களா ?’

கேட்பவர் : அதெப்படி சுவாமி ? டியூபில் காற்று இல்லாமல் எவ்வாறு மிதிவண்டி ஓடும் ?

சுவாமிகள் : அதுதான் எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருக்கிறதே ! டியூபில் காற்று இல்லாவிட்டால் என்ன ?’

மௌனமாக இருந்தவரிடம்…

சுவாமிகள் : எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருந்தாலும், அதை ஒரு டியூபில் நிறைக்கும் போதுதான், மிதிவண்டியை நம்மால் இயக்க முடிகிறது. அதுபோல, எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் ‘இறைவனின் சக்தியை’, ஒரு கோவிலில் ஸ்தாபிக்கும் போதுதான், அந்த சக்தியை நம்மால் உணர முடிகிறது என்றார்.

Leave a Comment