ராஜ்கிரண் தற்போது மிகப்பெரிய குணச்சித்திர நடிகர். 20 வருடங்களுக்கு முன் ஹீரோ. அதற்கு முன் தயாரிப்பாளர், 70களின் இறுதியில் விநியோகஸ்தர் , இப்படி பல பரிமாணங்களை எடுத்தவர் ராஜ்கிரண்.
இவர் விநியோகஸ்தராக இருந்த காலத்தில் காதர் என்ற ஒரிஜினல் பெயருடன் விநியோகத்தில் ஈடுபட்டார்.
அப்போது பத்ரகாளி படத்தை பழம்பெரும் இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார். அந்த படத்தை விநியோகஸ்தராக பார்த்த ராஜ்கிரணுக்கு கதையில் ஒரு முக்கிய காட்சியில் சில திருத்தங்களை செய்தால் இன்னும் படம் நன்றாக இருக்கும் என எண்ணினாராம்.
இருப்பினும் ஏசி திருலோகச்சந்தர் அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை இயக்கிய மிகப்பெரும் இயக்குனர் அல்லவா கதையில் திருத்தம் சொல்ல தயங்கினாராம் ராஜ்கிரண்.
உடனே எப்படி ஆரம்பிப்பது கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என திருலோகச்சந்தர் இயக்கிய இருமலர்கள் படத்தை பற்றி விலாவாரியாக சிலாகித்து பேசினாராம். அதில் மிகவும் மகிழ்ந்துவிட்டாராம் ஏசி திருலோகச்சந்தர்.
இதுதான் சமயம் என்று அவர் சந்தோஷமாக இருந்த நேரத்தில் பத்ரகாளி படத்தின் குறிப்பிட்ட காட்சியை சொல்லி மாற்ற சொல்லி இருக்கிறார். ராஜ்கிரண் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்ந்த ஏசி திருலோகச்சந்தர் அந்த காட்சியில் சிறு மாற்றம் செய்தாராம்.
இப்படி ஒரு சூழ்நிலை உணர்ந்து பேசுவதில் ராஜ்கிரண் வல்லவர் என ஒரு கட்டுரை இணையத்தில், சமூக வலைதளங்களில் உலா வருகிறது.