எண்பதுகளில் வந்த பல படங்களில் இவரை பார்த்திருக்கலாம். ஆஜானு பாகுவான தோற்றம் நக்கலான இயல்பான பேச்சு என பல படங்களில் வலம் வந்திருப்பார் இவர். இவரின் பெயர் விஜய் கிருஷ்ணராஜ் என்பது பலருக்கும் தெரிந்திருக்காத ஒன்று. தற்போது சீரியல்களில் தலை காட்டுவதால் சிலர் இவரைப்பற்றி அறிந்திருக்கலாம்.
இவர் ஒரு கதை வசனகர்த்தா என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். ராஜாத்தி ரோஜாக்கிளி,ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பூந்தோட்ட காவல்காரன் ,கோவை பிரதர்ஸ், வான்மதி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவர் வில்லத்தனத்தில் மிரட்டி நடித்த படம் பிரபல நடிகரும் இயக்குனருமான அனுமோகன் இயக்கிய நினைவு சின்னம் திரைப்படம். அதில் முன் பல் எடுப்பாக தெரியும்படியான வில்லத்தனமான கிராமத்து இன்ஸ்பெக்டராக நடித்து இருந்தார் இவர்.
ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன், சிவக்குமாரின் முக்கிய படங்களில் ஒன்றான ரோசாப்பு ரவிக்கைகாரி, சிவாஜி நடித்த கல்தூண் உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார் இவர்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் இவர். இவரும் தமிழ் சினிமாவின் ஒரு பல்துறை வித்தகர் ஆவார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் இவரின் பங்கும் முக்கியமானது ஆகும்.