இன்று நகைச்சுவை பேரரசன் கவுண்டமணியின் பிறந்த நாள். 1964ல் வந்த சர்வர் சுந்தரம் படத்திலேயே ஒரு சிறிய ரோலில் அறிமுகமானவர் கவுண்டமணி. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் இவர். ஆரம்ப காலங்களில் பதினாறு வயதினிலே, சுவரில்லாத சித்திரங்கள், போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் வெளுத்துக்கட்டினார்.
இவரின் காமெடி நடிப்புக்கு எண்பதுகளில் பிறந்தவர்கள் மகிழ்ந்து சிரித்து பெரிதும் ரசித்தார்கள். இன்று வரை அனைத்து வயது தரப்பினரும் ரசித்து சிரிக்கிறார்கள்.
ஒற்றை ஆளாக காமெடி செய்த கவுண்டமணி செந்திலுடன் உதயகீதம் படத்தில் ஜோடியாக காமெடி செய்தார். அதற்கு முன்பு செந்திலுடன் கவுண்டமணி நடித்திருக்கலாம். ஆனால் முதன் முதலில் இந்த படத்தில் இருந்துதான் கவுண்டமணி, செந்தில் காமெடி டிராக் உருவானது. படத்தின் கதை போக்கு வேறு பாதையில் இருந்தாலும் இடை இடையே வரும் சோக காட்சிகளுக்கு இடையில் கவுண்டமணி, செந்தில் காமெடி பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
இந்த காமெடி டிராக்குக்கு வசனம் எழுதிய நகைச்சுவை எழுத்தாளர் வீரப்பன் பின்னாட்களில் கரகாட்டக்காரன் படத்தில் எழுதிய காமெடி வசனங்கள் அடி தூள் கிளப்பின.
சின்னக்கவுண்டர், ராஜகுமாரன்,வில்லுப்பாட்டுக்காரன்,ஜெண்டில்மேன் என பல நூறு படங்களில் கவுண்டமணி, செந்தில் இருவரும் ஜோடி காமெடி நடித்து புகழ்பெற்றுள்ளனர்.
கவுண்டமணியின் பல காமெடி வசனங்கள் நறுக்கு தெறித்தாற்போல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற அளவில் இருக்கும். அதனால் கவுண்டமணியின் படங்கள் இன்றளவும் ரசித்து சிரிக்கப்படுகிறது.
பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு கதாநாயகனாக நடித்தவர் கவுண்டமணி.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவுண்டமணியை வாழ்த்துவோம்.
கவுண்டமணியின் படங்கள் அவர் படங்களின் காமெடி வசனங்கள் எல்லாம் வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்றது அள்ளுவது சிரமம். அதனால் அவர் படங்களை பற்றியும் காமெடி பற்றியும் எழுதினால் இந்த ஒரு கட்டுரை இன்னும் பல கட்டுரை எழுதினாலும் போதாது.