திருவானைக்காவல் கோவில் – மகா சிவராத்திரி வழிபாடு

By Staff

Published:

267c70c77cd175a79f566f0b12df7825

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகரத்திலும் ஒரு பெரிய சிவன்கோவில் இருக்கும். சென்னையில் கபாலீஸ்வரர் என்றால் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்சியில் ஜம்புகேஸ்வரர் . திருச்சி மாநகரத்தில் அனைவரும் உச்சரிக்கும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை பற்றிதான் சிவராத்திரி ஸ்பெஷலுக்காக இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என அழைக்கின்றனர். திருவானைக்கா என்றும், திருவானைக்காவல் என்றும் திருவானைக்கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கின்றார்கள்.

பஞ்சபூதங்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என எல்லாவற்றுக்கும் கோவில் உள்ளது. அதில் நீர் ஸ்தலமாக இக்கோவில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரியை வணங்கினால் வாழ்வில் சகல தோஷமும் நீங்க பெறுவீர்கள் என்பது உறுதி.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே ஒரு சித்தர் போல் வந்து மதில் சுவர் எழுப்பி பணியாளர்களுக்கு திருநீற்றை கூலியாகக் கொடுத்தாராம். பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இந்த மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடைக் காலத்திலும் , காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்த நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விசயமாகும்.

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் தங்களில் யார் அதிகமாக சிவ சேவை புரிகிறார்கள்  என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. யானை வழிபட்ட ஸ்தலம் என இக்கோவிலுக்கு பெயர் உள்ளது.

எல்லா சிவாலயங்களும் திறந்திருப்பது போலவே சிவராத்திரி அன்று விடிய விடிய இந்த சிவாலயமும் திறந்திருக்கும். நான்கு கால பூஜைகள் நடைபெறும் கலந்து கொண்டால் சிறப்பு.

Leave a Comment