இலங்கையில் முக்கிய முருகன் கோவில்களில் நல்லூர் முருகன் கோவில் முக்கியமானதாகும். இலங்கையில் கண்டி கதிர்காமர் முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் இருக்கும் இக்கோவில் பற்றி ஒரு சிலர் தவிர பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இது முருகன் கோவில்தான் தமிழ்நாட்டில் திருப்போரூர் கந்தசாமி கோவில் போல இது நல்லூரில் உள்ள கந்தசாமி கோவில்.
யாழ்ப்பாணம் நகருக்கு 2 கிமீ தொலைவில் நல்லூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளில் முதலாவது கூழங்கை சக்கரவர்த்தியின் அமைச்சரான புவனேக பாகு என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாக யாழ்பாண வைபவமாலை கூறுகிறது.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இது ஆகும் போர்த்துக்கீசியருடைய குறிப்புக்களிலிருந்து இது தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசியத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான்.
இதிலிருந்து பெறப்பட்ட கற்களை வைத்து யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டினான். கோவில் இருந்த இடத்தில் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் என்பவரின் ஆட்சிக்காலத்தின் இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் திரும்ப அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த முறைக்கும், சிற்ப சாஸ்த்திர கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
இக்கோவிலில் மூலஸ்தானத்தில் வேலுடன் முருகன் உள்ளார் சுற்றி இருக்கும் பரிவார தெய்வங்களும் உள்ளன .இங்கு ஆவணி மாதம் தான் திருவிழா.
ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு முருகனுக்கு மகோற்சவம் நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்திர மஹோற்சவம் துவங்குகிறது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்,காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
நீங்களும் இலங்கை சென்றால் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை நல்லூர் முருகன் கோவில் சென்று முருகனை வணங்கி வாருங்கள் வாழ்வில் நலம் வளம் பெறுங்கள்.