தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடி செய்து புகழ்பெற்றவர் வடிவேலு. இவர் திரையில் வந்தாலே கீழே விழுந்து புரண்டு உருண்டு சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்பவர்.
மதுரைக்காரர் ஆன வடிவேலு எம்.ஜி.ஆர், சிவாஜி, காலத்து படங்களை பார்த்து ரசித்தவர். சிறு வயதில் தியேட்டரிலேயே கிடந்தவர். வடிவேலு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் வரும் பாடல்களை தன் கணீர் குரலால் இயற்கையாக பாடும் வரம் பெற்றவர்.
சினிமா காமெடிகளிலும் காட்சிக்கேற்றவாறு அழகான பாடல்களை உச்சஸ்தாயில் பாடியுள்ளார் வடிவேல்.
ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை என்ற காதலன் படப்பாடலை குழுவினருடன் முதன் முதலில் சேர்ந்து பாடினார்.
இவரின் பாடல் திறமையை கண்டு இசைஞானி இளையராஜா தன் எல்லாமே என் ராசாதான் படத்தில் எட்டணா இருந்தா எட்டூரு என்ற முழு பாடல் பாட வைத்தார்.
அதன் பிறகு பாரதிகண்ணம்மா படத்தில் இடம்பெற்ற ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லட் ரயிலு பாடலை தேவா இசையிலும், யுவனின் இசையில் வேல் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் ஜன்னல் வீடு, பூந்தோட்டம் படத்தின் பொன்னுமணி பொன்னுமணி போறாளே, போன்ற பாடல்களையும் ராஜகாளியம்மன் படத்தில் இடம்பெற்ற சந்தன மல்லிகையில் போன்ற பக்தி பாடல்களையும் வடிவேலு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவா இசையில் இவர் பாடிய ஊனம் ஊனம் ஊனம் இங்கே, பாடல் அற்புதமான கருத்து சிந்தனை உள்ள பாடல், அதே போல் வடிவேலு பாடிய வாடி பொட்டப்புள்ள வெளியே என்ற பாடல் மிக புகழ்பெற்ற பாடல் ஆகும்