துத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலிக்கு முன்பு உள்ள ஒரு சிற்றூர்தான் வல்லநாடு. இங்குதான் வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள் என்ற மகானின் ஜீவசமாதி உள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ளவர் ஸ்வாமிகள். அதே நேரத்தில் எந்த ஒரு ஜீவராசியையும் அளவுக்கு அதிகமாக நேசித்தவர். சிறுவயதில் பள்ளிப்படிப்பை சரிவர முடிக்காத ஸ்வாமிகள் வல்லநாடு மலைகளில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
சகல ஜீவராசிகளிடம் பற்றுக்கொண்ட ஸ்வாமிகளை சுருக்கமாக சொன்னால் வள்ளலார் வழிவந்தவர் என இவரை சொல்லலாம். வள்ளலாரின் மறுபிறவி என்றும் சில பக்தர்கள் அன்புமிகுதியால் இவரை கூறுகிறார்கள்.
இறை அருளால் ஸ்வாமிகள் சகல சித்துக்களும் கைவரப்பெற்றவர். இவர் அடிக்கடி சதுரகிரிமலைக்கு செல்லும்போது அங்கு இருந்த ஒற்றைகொம்பன் என்ற யானை மீது மிகுந்த பற்றுள்ளவர். சதுரகிரியில் வாழ்ந்த அந்த ஒற்றைக்கொம்பன் யானை முரட்டுக்குணம் உடைய யானையாம். யாருக்கும் கட்டுப்படாத அந்த யானை ஸ்வாமி காதில் சொன்ன மந்திரச்சொல்லால் கட்டுப்பட்டு அதற்கு பிறகு அமைதியான யானையாகி விட்டதாம். சாது சிதம்பர ஸ்வாமிகள் சதுரகிரி செல்லும்போது அந்த யானை ஸ்வாமிக்கு மிகுந்த மரியாதை செய்யுமாம். அதன் மீது அளவு கடந்த பாசத்தை ஸ்வாமிகள் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அந்த யானை முரட்டுத்தனத்தை விட்டு அமைதியாக வாழ்ந்த போதும், அந்த யானை முன்பு செய்த தவறுக்காக அந்த யானையை யாரோ காட்டில் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். அதனால் மனம் வருந்திய ஸ்வாமி அந்த யானையின் சிரசு , தந்தம் போன்றவற்றை முறைப்படி வனத்துறை அனுமதி பெற்று எடுத்து வந்து தன்னுடைய இடத்தில் நினைவாலயம் போல அமைத்து விட்டார். யானையின் சிரசுக்கு அருகிலேயே 1981ல் ஜீவசமாதியான ஸ்வாமிகளும் உள்ளார். தந்தம் நினைவாலயம் அருகே விநாயகர் கோவில் கட்டப்பட்டு அதன் உள்ளே வணங்குவதற்கு உள்ளது.
ஸ்வாமிகள் நவகண்டம் அதாவது உடலை ஏழு கூறு எட்டு கூறுகளாக போட்டு பிரித்து காண்பிப்பாராம். திருமண வாழ்க்கையில் நாட்டமில்லாத ஸ்வாமிகளுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்வாமிகள் திருமண பந்தத்தில் இருக்கவில்லை. துறவறம் நோக்கி சென்ற நிலையில் அவரது மனைவியான அந்த பெண்ணும் இறைசேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார். ஸ்வாமிகள் யாசகம் கேட்டு சாப்பிடுவது எல்லாம் பொறுக்காத இவரது உறவினர்கள் நம்மை அவமானப்படுத்துகிறார் என இவரை கொல்ல வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஸ்வாமிகள் உடலை ஏழு எட்டு கூறுகளாக போட்டு காண்பித்திருக்கிறார் அதை பார்த்தவர்கள் ஸ்வாமியை நமக்கு முன்பே யாரோ கொலை செய்துவிட்டார்கள் என பயத்தில் சென்றுவிட்டார்களாம். அடுத்த நாள் ஸ்வாமியை பார்த்து கொலை செய்ய வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படி பல சித்து வேலைகள் செய்தவர் ஸ்வாமிகள்.
சதுரகிரி ஒற்றைக்கொம்பன் யானையோடு சேர்த்து மணிகண்டன் என்ற யானையையும் ஸ்வாமி வளர்த்து வந்துள்ளார். உயிர்களின் மீது அளவுக்கதிகமான பாசம் கொண்ட ஸ்வாமிகள் அனைத்து உயிர்களும் நன்முறையில் வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கம் கொண்டவர். எல்லோரும் சாப்பாடு இல்லாமல் இருக்க கூடாது அனைவரின் பசிப்பிணி போக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்னதானம் செய்யும் பணியே உயரிய பணி என இவரது ஆஸ்ரமத்தில் அன்னாதானம் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த பெண்ணுக்கு உடல்ரீதியாக பாதிப்பு ஏற்பட இங்கு வந்து அன்னதானத்தில் கலந்து கொள் உன் உடல் நோயை தீர்த்துவைக்கிறேன் என அந்தப்பெண்ணிடம் சூட்சுமமாக ஸ்வாமிகள் உரைத்திருக்கிறார் அதன்படி அந்த பெண் இங்கு வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு அவரின் வயிற்றுவலி நோய் நீங்கி குணம் பெற்றிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் பல பெரிய அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் ஸ்வாமியை வந்து பயபக்தியுடன் இன்றளவும் வந்து வணங்கி செல்கின்றனர். சுற்றிலும் ஸ்வாமிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு.
இங்கு வந்து இவரது ஜீவசமாதியில் சிறிது நேரம் உட்கார்ந்து இவரை மனதால் எண்ணி நம் பிரச்சினைகளை சொல்லி வழிபட்டால் நம் பிரச்சினைகளை தீர்க்க நல்வழிகாட்ட இவர் தயங்கமாட்டார் என்பது உண்மை.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பேருந்திலோ அல்லது நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்திலோ ஏறி வல்லநாடு ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ பாறைக்காடு என்ற இடத்தில் 1.5 கிமீ தூரம் உள்ள இவரின் ஆஸ்ரமத்தை அடையவேண்டும்.