பில்லி சூனிய தொல்லையிலிருந்து விடுபட கருட ஜெயந்தி நாளில் கருட பகவானை வணங்குவோம்..

பில்லி, சூனியம், நாக தோசம் மாதிரியானதொல்லைகளிலிருந்து நம்மை காக்கும் கருட பகவான் அவதரித்த தினம் இன்று(28/7/2020). ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில்தான் கருடபகவான் அவதரித்தார். இந்நிகழ்வை அனைத்து வைணவ தலங்களிலும் மிக விசேஷமாக கொண்டாடப்படும்.…

பில்லி, சூனியம், நாக தோசம் மாதிரியானதொல்லைகளிலிருந்து நம்மை காக்கும் கருட பகவான் அவதரித்த தினம் இன்று(28/7/2020). ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில்தான் கருடபகவான் அவதரித்தார். இந்நிகழ்வை அனைத்து வைணவ தலங்களிலும் மிக விசேஷமாக கொண்டாடப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்களின்றி ஆச்சார்யார்கள் உட்பட சொற்ப ஆட்களுடன் மட்டும் ஆலயத்திற்குள்ளாகவே கருட ஜெயந்தி கொண்டாடப்படும்.

விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்தில் கருட பகவானது சேவை தொடர்ந்தது. ராம அவதாரத்தில் போர்க்களத்தில் மூர்ச்சையுற்றிருந்த ராம லட்சுமணர் மயக்கம் தெளிய தனது சிறகால் விசிறி விட்டார். கிருஷ்ண அவதாரத்தில் சத்யபாமாவிற்காக பாரிஜாத மரத்தை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தார். பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம்..

கருடனுக்கு விஹாகேஸ்வரன், வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, கருடாழ்வார், கருடபகவான்.. எனவும் இவரை அழைப்பர். இவரை வணங்குவதால் பலசாலியாகவும், உடல் வலிமையுள்ளர்வர்களாகவும், வீரத்துடன் விவேகத்துடனும் நமது குழந்தைகள் விளங்குவர் என்பது நம்பிக்கை.

வினதைக்கு அருணனும் கருடனும், கத்ருவுக்கு நாகர்களும் வாரிசு. ஒருமுறை வினதையும், கத்ருவும் தோட்டத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது இந்திரனின் வாகனமான உச்சைச்சிரவ் அந்தப்பக்கம் சென்றது. வினதையிடம் அந்தக்குதிரை வாலின் நிறம் என்னன்னு கத்ரு கேட்டாள். வாலின் நிறம் வெண்மைன்னு வினதை சொன்னாள். இல்லை, அதன் நிறம் கருப்பு என கத்ரு வாதிட்டாள். வாதம் சூடுப்பிடித்து வாக்குவாதமானது. போட்டியில் தோற்பவர் வெற்றி பெற்றவருக்கு அடிமை எனவும், அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென முடிவானது.  கத்ரு தன் பிள்ளைகளிடம் சென்று கருமை நிறம் கொண்டவர்களில் உச்சைச்சிரவ் வாலில் சுற்றிக்கொண்டு வாலை கறுப்பாக்குங்கள் என  உத்தரவிட, அவளின் பிள்ளைகளும் அப்படியே அவ்வாறு செய்ய குதிரையின் வால் கருப்பானது. பின்பு, ஏதுமறியாதவள் போல வினதையை அழைத்துக்கொண்டு கத்ரு குதிரையை காண சென்றாள்.  அங்கு குதிரையின் வால் கருமையாக இருப்பதை காட்டி நீ எனக்கு அடிமை என சொன்னாள். வினதையும் ஒத்துக்கொண்டு கத்ருவின் அடிமையானாள். எங்கு சென்றாலும் கத்ருவை சுமந்து செல்வது அவளின் வேலையானது.   இதுமட்டுமின்றி அருணன் மற்றும் கருடனும் அவளின் தாயாரோடு சேர்த்து கத்ருவுக்கும், அவளின் பிள்ளைக்கு அடிமையாயினர். 

தாயின் அடிமைத்தனம் கண்டு மனம் பொறுக்கா கருடன் தன் மாற்றாந்தாயான கத்ருவிடம் சென்று தங்களை விடுவிக்குமாறு வேண்டி நின்றார். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தரவேண்டும் என நிபந்தனையிட்டாள். மாற்றாந்தாயின் நிபந்தனையின்படி தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான். தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.

இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார். ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.

சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.

விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது.  முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார். கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காபாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.

இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் சொல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக. மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார்.  நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு. மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக் கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.

தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன்.    வினதையோடு கருடன் மற்றும் அருணனுக்கு நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலை கிடைத்தது. நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன. ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாகங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து…. வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான். 

அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள், பெற்ற தாயைப் போற்றி வணங்கியதன் காரணமாக கருடனுக்குக் கிடைத்தன. அதனால், எப்பேற்பட்ட பலசாலியானாலும், இறைபக்தி, ஒழுக்கம், குடும்ப உறுப்பினர்கள்மீது பாசமும், மரியாதையும் கொண்டிருந்தால் பெரிய நிலையை அடையலாம் என நமக்கு கருடாழ்வார் வாழ்க்கை எடுத்து சொல்கிறது.

கருட ஜெயந்தியான இன்று கருடாழ்வாரை இல்லத்திலிருந்தே வணங்கி நற்பலன் பெறுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன