பல நூறு தெய்வங்கள் இருந்தாலும் வணங்க மிக எளிமையான தெய்வம் பிள்ளையார் ஆகும். சாணம், மஞ்சள், சந்தனம் என எதிலும் அவரை உருவாக்கமுடியும். அத்தனை எளிமையாய் இருப்பதாலேயே ஆற்றங்கரை, அரசமர நிழல், தெருமுனை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். பிள்ளையார் எப்படி உருவானார் என்பதை பார்க்கலாமா?!
விநாயகருக்கு யானை முகம் வந்ததற்கு சொல்லும் பல காரணங்களில்.முக்கியமான காரணம் கஜமுகாசுரன் கதையாகும். ”கஜமுகாசுரன்”என்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு நேர வெண்டுமென வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லையென அவன் போட்ட கணக்கு சரியாகவே இருந்தது. அவனை எதிர்க்க ஆளில்லாததால் அவனது தொல்லைகள் பாதாளலோகம், தேவலோகம், நாகலோகம் என சர்வலோகங்களையும் ஆட்டி படைத்தது..
தேவர்களை வதைத்தான். அவர்கள் துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை (அழுக்குன்னும் சிலர் சொல்கிறார்கள். நாம நல்லதையே எடுத்துப்போமே!) வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். அந்த மஞ்சள் உருண்டைக்கு உடல் உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தை அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். கயிலாயம் வந்த சிவப்பெருமான் குழந்தையை கண்டு இந்த பிள்ளை யார் எனக்கேட்க, அன்றிலிருந்து பிள்ளையார் என்று அழைக்கப்பட்டான்.
கஜமுகாசூரன் அழிவு நெருங்கியது. சிவன் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு இருந்த பிள்ளையார் தடுக்க, என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன் என சிவன் வாக்கு கொடுத்தார். அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை உணர்ந்த எல்லா ஜீவன்களும் வடக்கில் தலை வைத்து படுக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, வெட்டுப்பட்ட உடலில் யானை தலையை வைத்து சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததார். தன் பிள்ளையின் உடல் இப்படியாகிவிட்டதேயென அன்னை அழுதாள் காரணமின்றி காரியமில்லை… பிள்ளையாரின் பிறப்பின் நோக்கம் அன்னைக்கும், பிள்ளையாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
தன் பிறப்பின் நோக்கம் அறிந்த விநாயகர் கஜமுகன்மீது படை எடுத்து சென்று அவன்மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உருக்கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேண்டுக்கோளுக்கிணங்கி, தன் வாகனமாக்கி கொண்டார்.
இதுவே விநாயகர் உருவான கதை.. நாளைய தினம் விநாயகர் சதுர்த்தியாகும்… கொரோனா அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டிலிருந்தபடியே அவரை வணங்க தடையேதுமில்லை.. வீட்டிலிருந்தபடியே அவரை வழிபட்டு நற்பலன் பெறுவோம்..