பாடல்:
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழி: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?
உறக்கம் தெளியாத பெண்: “அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக்கிளிப்போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?
தோழியர்: “அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல்தான் எண்ணவேண்டும். எண்ணியப்பின் தோழிகளின் எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் தோழிகளை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு.
விளக்கம்:
ஆரோக்கியமான போட்டி இருத்தல் நலம். அதைவிட்டு அடுத்தவர் என்ன செய்கின்றனர்?! நமக்கு எப்படி மரியாதை செய்கின்றனர்? நமக்காக காத்திருக்கின்றனரா என மற்றவரோடு போட்டியிடாமல் இறைவனை அடைய “நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதே இப்பாடலின் உட்கருத்து.
திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…