இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் 108 திருப்பதிகளில் 44வது திருப்பதியாகும். ராமாயணத்தின் பெரும்பகுதி இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருப்புல்லாணி பகுதிகளில் நடந்தவைதான் என்பதற்கு வரலாற்று சான்றுகள் அதிகம் உள்ளது.
இதில் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதரை ராமரின் தந்தை தசரதர் வணங்கித்தான் ராமபிரான் பிறந்ததாக ஐதீகம். பின்னாட்களில் ராமபிரான் சீதாபிராட்டியை மீட்க திருப்புல்லாணி வந்து பெருமாளை வணங்கி அருகில் இருக்கும் சேதுக்கரை சென்று அங்கிருந்து பாலம் அமைத்துதான் இலங்கை சென்றதாக வரலாறு.
ராமருக்கு பாலம் அமைக்க அனுமன் தலைமையில் வானர சேனைகள் அவருக்கு உதவின. இதன் அடிப்படையில் ஆஞ்சநேயருக்கு இங்கு கோவில் உள்ளது.
இங்கிருந்து இலங்கை சென்று பல போராட்டங்களுக்கு பிறகு சீதையை மீட்டுக்கொண்டு வெற்றிகரமாக ராமர் ராமேஸ்வரம் வந்து இராமலிங்க பிரதிஷ்டை செய்கிறார்.
அதனால் ராமர் கால்பட்ட புண்ணிய பூமியான இங்கு எந்த காரியம் செய்தாலும் வெற்றிதான் இந்த ஆஞ்சநேயரும் வெற்றிக்குரிய ஆஞ்சநேயராக வேண்டுவோருக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவர் தோன்றிய அவதார தினமான ஹனுமன் ஜெயந்தியாகும் நாளை இவரை வணங்குங்கள். அருகில் உள்ள ஏதாவது ஆஞ்சநேயர் கோவிலுக்கோ வாய்ப்பு இருப்பவர்கள் சேதுக்கரைக்கோ வந்து வணங்குங்கள் நலம் பெறுங்கள்.