இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தரும். அதனாலாயேதான் சுப நிகழ்ச்சிகளின்போதும், வழிபாட்டின்போதும் குத்துவிளக்கேற்றுவதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்மதேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் அம்சமாய் கொண்டுள்ளது. விளக்கில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் குறிக்கிறது என்று கூறுவார்கள். பஞ்சபூத சக்தியினை அடிப்படையாக செயல்படுவதை குறிக்கும்விதமாக விளக்கிற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது.
குத்து விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். பலபேர் இன்றைய அவசர காலக்கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்பற்றுவது கிடையாது. சுத்தமாக கழுவி, மஞ்சள் குங்குமமிட்டு, பூவைத்து, பசுஞ்சாணம் அல்லது பச்சரிசியின்மீதே குத்துவிளக்கை எப்போதும் வைக்கவேண்டும். குத்து விளக்கை ஏற்றும்பொழுது ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். திரி முதலில் போட்டுவிட்டு நெய் விடுவது தவறான முறையாகும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போடவேண்டும். அதன் பின்புதான் தீபமேற்றி வழிபட வேண்டும். சரியான முறை இதுவே எனச்சொல்கிறது சாஸ்திரம்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த குத்து விளக்கை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமது இஷ்டப்படி துலக்குவது தவறான செயலாகும். அதற்கென்று பிரத்தியேக நாட்கள் உள்ளன. எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கினால் என்ன பலன்கள் கிட்டும்? என்பதை பற்றியும் எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கக் கூடாது? ஏன் துலக்கக் கூடாது? என்பதைப் பற்றியும்இனி விரிவாக காணலாம்.
முதலில் விளக்கை ஏனோதானோ என்று துலக்கி வைக்கக்கூடாது. நன்கு சுத்தமாக பளிச்சிடும்படி துலக்க வேண்டும். பச்சை பயிறு, பச்சரிசி, எலுமிச்சைத் தோல்,வெந்தயம் ஆகியவற்றை உலரவைத்து அரைத்து வைத்துக்கொள்ள ]வேண்டும். இந்த கலவையை கொண்டு துலக்கினால் புத்தம்புது விளக்கு போல் பளிச்சிடும். இதில் சிறிது சிகைக்காய் சேர்த்து துலக்கினால் மேலும் பளிச்சிடும்..
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்துவிளக்கை துலக்க வேண்டும். செவ்வாய், புதன், வெள்ளி இந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்குவது முறையான செயல் அல்ல. திங்கள் கிழமை அன்று இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை குத்துவிளக்கில் குபேர மற்றும் குக குரு தாட்சாயணி போன்ற தெய்வங்கள் குடிக்கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே இந்த காலக்கட்டத்தில் துலக்கினால் அவர்களின் சக்தி எல்லாம் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
மேலும் வெள்ளியன்று துலக்குவதால் குபேர சங்க நிதி யட்சிணி போன்ற தெய்வம் சகல வளங்களையும் அதில் குடியிருந்து அந்த குடும்பத்திற்கு நன்மையை நல்குவதாக ஐதீகம் உள்ளது. எனவே செவ்வாய், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களிலும் குத்து விளக்கை துலக்குவதை தவிர்ப்பது அந்த குடும்பதிற்கு மேன்மையை தரும். ஞாயிறு அன்று குத்து விளக்கை துலக்குவதால் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீங்கிவிடும். பிரகாசமான பார்வை கிடைக்கப்பெறும். திங்களன்று குத்துவிளக்கை துலக்குவதால் மனஇறுக்கம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். எந்த குழப்பமும் இல்லாமல் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை மேலோங்கி காணப்படும்
வியாழனன்று குத்து விளக்கை துலக்குவதால் குருவின் பார்வை கிட்டும். குருவின் பார்வை அமைந்தாலே அனைத்தும் நன்மையாகவே நடக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் சுலபமாக தீர்ந்துவிடும். சனிக்கிழமை குத்து விளக்கினை துலக்குவதால் விபத்து நேர இருப்பதை தவிர்த்துக்கொள்ள உதவும். இழந்த பொருட்களை திரும்பப் பெறும் பாக்கியமும் உண்டாகும். இதேபோல் அன்றைய தினம் வரும் பஞ்சமி திதியில் குத்து விளக்கை துலக்குவதன் மூலம் அகால மரணம் ஏற்படுவதை தடுக்கக்கூடிய பலன் உண்டு என்று கூறப்படுகிறது.
குத்துவிளக்கு என்பது வெறும் விளக்கல்ல! தெய்வாம்சம் பொருந்திய ஒரு பொருள். அதை சரிவர கையாண்டு நற்பலன்களை தக்கவைத்துக்கொள்வோம்.