பழனி முருகன் மலைக்கோவிலில் இரவு நேரத்தில் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது. எப்பேற்பட்டவரா இருந்தாலும் சாமி தரிசனம் முடிந்ததும் மலையைவிட்டு இறங்கிடவேண்டுமென்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் நியதி.
ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி பகுதி மக்களுக்கு மட்டும் தைப்பூசத்திற்கு பிறகு ஒருநாள் இரவு இக்கோவிலில் தங்க அனுமதிக்கப்படுவர். எடப்பாடி பகுதி மக்களுக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு அனுமதி என தெரிஞ்சுக்கலாமா?!
முருகன் தங்கள் ஊர் மாப்பிள்ளை என எடப்பாடி மக்கள் சொல்றாங்க. தைப்பூசத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்ததும், வயது, பாலின வித்தியாசமில்லாம கங்கணம் கட்டி விரதமிருந்து பாதயாத்திரை போக தயாராகிவிடுவார்கள். பழனி முருகன் கோவில் போலவே எடப்பாடியில் இன்னொரு கோவிலை உருவாக்கி முருகனை அதில் ஆவகணப்படுத்தி பெருவிழா எடுப்பார்கள். அப்போது பழனி முருகன் எடப்பாடிக்கே வந்துவிடுவதாக நம்பிக்கை. அத்தோடு பாதயாத்திரையின்போது முருகன் எடப்பாடி மக்களுடன் வருவதாகவும் நம்பிக்கை. பால் காவடி, கரும்பு காவடி, சர்க்கரை காவடின்னு விதம்விதமான காவடியுடன் தங்கள் மருமகனை காண பாதயாத்திரை செல்கின்றனர். முருகனிடம் அனுமதி கிடைத்தபின்னரே மச்சக்காவடி எடுப்பர்.
மலையில் தங்கும் இரவு பஞ்சாமிதர்தம் தயாரிக்க பழங்கள், கற்கண்டு, வெல்லத்தினை தாங்களே தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வருவர். இதுக்கு ஒரு காரணத்தினை இப்பகுதி சொல்றாங்க. அதாவது, பழத்துக்காக அம்மையப்பனிடம் கோவிச்சுக்கிட்டு பழனி மலைக்கு வரும்போது முருகனுக்கு பசிச்சுதாம். வழியில் தென்பட்ட வயல்வெளிகளில் அறுவடை நடந்திக்கிட்டிருந்திருக்கு. அவங்கக்கிட்ட கேட்கும்போது பண்ணையாருக்கு பயந்து யாரும் கொடுக்கல. ஆனா, அங்க வேலை செஞ்ச பொண்ணு ஒருத்தி கொஞ்சம் திணையை கொடுத்தாளாம். இதைக் கேள்விப்பட்ட பண்ணைக்காரரு அந்தப் பொண்ண வேலையவிட்டு அனுப்பிட்டாரு. கூலியையும் கொடுக்கல. அந்தப் பொண்ணு அழத் தொடங்கிட்டா. இதைப் பார்த்த முருகன், அந்தப் பொண்ணையும் தன்கூட பழநிக்கு அழைச்சுக்கிட்டு வந்து மணம் முடிச்சிட்டாரு. அந்தப் பெண்தான் எங்க ஊரு வள்ளி. வள்ளி எங்க வீட்டு மக. முருகன் எங்க ஊரு மருமகன். முருகனுக்கு சீர் கொண்டு வர்றது எங்களோட உரிமை” என ஒரு கதை சொல்றாங்க.
முருகன் மருமகனான கதை இது. பழனி மலையில் தங்கும் உரிமை எப்படி வந்ததென இன்னொரு கதை சொல்றாங்க.
மலைக்கோயில் பெரிய தேர் ஒருசமயம் குழில சிக்கிடுச்சு. யார் இழுத்தும் தேர் நகரல. யானையக்கூட கட்டி இழுத்தாங்க. தேர் அசைஞ்சு கொடுக்கல. எடப்பாடி மக்கள் இழுத்தபோதுதான் தேர் நகர்ந்தது. அதைப் பார்த்த மன்னர் இப்பகுதி மக்களுக்கு ‘செப்புப் பட்டயம்’ ஒண்ணு கொடுத்திருக்காரு. அந்தப் பட்டயம் மூலம்தான் அவர்கள் மலைக்கோயில்ல தங்கறதுக்கான உரிமை பெற்றதாக சொல்றாங்க. அவங்க மலைல தங்கறப்போ இரவு ரோந்து பணியில் இருக்குறவங்க தவிர, வேறு யாரும் இருக்க மாட்டாங்க. முருகனுக்கு செய்யற பூஜையக்கூடஎடப்பாடி மக்கள்தான் செய்வார்கள். தங்களோட பிரச்சனை, நல்லது, கெட்டதுன்னு எல்லாத்தையும் முருகனிடம் சொல்வாங்களாம். மறுநாள் வீட்டில் படையிலிட்டு முருகன் படத்தின்முன் கங்கணம் கட்டி விரதத்தினை முடிப்பார்கள். மீண்டும் அடுத்த வருடம் தங்கள் மருமகனுக்கான சீர் செய்ய எப்படி பணம் சேர்ப்பது?! என்ன சீர் செய்வது என யோசிக்க ஆரம்பிப்பாங்க.
முருகன் அருள் இருந்தால் எல்லாம் கைகூடும்…