நவராத்திரி வழிபாடு அம்பிகைக்கான வழிபாடு.அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா செழிப்புற நடந்தாலும், சில கோவில்களில் மிக பிரமாண்டமாக இருக்கும். அப்படி ஒரு கோவில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக்கோவிலை தெரியாதோர் யாரும் இருக்க முடியாது. மதுரையின் முக்கிய மையப்பகுதியான பெரியார் பேருந்து நிலையம், டவுன் ஹால் ரோடு மற்றும் சித்திரை வீதிகள் அனைத்தும் மிக பிஸியானவை. எல்லாவிதமான வியாபாரங்களும் நடக்கும் ஒரு பகுதியாகும்.
இப்போது எல்லாம் யாருக்குமே தெரியாத கோவில்களில் கூட மிக அதிகமான கூட்டம் வருகிறது. மக்களிடையே ஆன்மிக நாட்டம் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட காலத்தில் இவ்வளவு பிஸியான இடத்தில் இக்கோவில் இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து மக்கள் அதிகமாக வந்து செல்வதாலும் இக்கோவில் எப்போதுமே பிஸியான கோவில்தான். சென்ற உடன் மீனாட்சி அம்மனை பார்த்து திரும்ப முடியாது.
உவமைக்கு கூட காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்றுதான் சொல்வோம் அப்படிப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடக்கும். பச்சை பட்டில் பச்சை கிளியோடு மீனாட்சி அம்பிகையை பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும்.
இக்கோவிலில் மிக நீண்ட தூரத்திற்கு கொலு அமைத்திருப்பர். அதை பார்ப்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் மீனாட்சி அம்மன் கோவில் கொலு பார்த்து விட்டு மீனாட்சி அம்பிகையை சொக்க நாதரையும் தரிசனம் செய்து வாருங்கள், வாழ்வில் வேண்டிய வரமளிப்பாள் மீனாட்சி அம்பிகை.