பாடல்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்…….
பொருள்..
மதங்கொண்ட யானைக்கு நிகரான வலிமை கொண்டவனும், போர்க்களத்தில் எதிரிகளிடம் பின்வாங்காத தோள் வலிமை உடையவனுமாகிய நந்தகோபாலனின் மருமகளே! நப்பின்னையே! மணம் கமழும் கூந்தலை கொண்டவளே! வாசற்கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக எங்கும் கோழிகள் கூவுகின்றன. குருக் கத்திப் பந்தலின் மேலிருந்து குயில்கள் மீண்டும், மீண்டும் கூவி அழைக்கின்றன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களை உடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னோடு சேர்ந்துபாட நாங்கள் வந்துள்ளோம். வளையல்கள் ஒலிக்க வந்து உன் தாமரை கைகளால் கதவைத் திறப்பாயாக!
விளக்கம்..
கண்ணனை, பலராமனை எழுப்பி பார்த்து, அவர்கள் உறக்கம் தெளியாததால் கிருஷ்ணனின் மனைவியான நப்பின்னையை எழுப்புகிறார்கள் பெண்கள். எப்பவுமே பெண்கள் சீக்கிரத்துல உறக்கம் தெளிஞ்சிடுவாங்க. அதுமில்லாம, மத்தவங்க கஷ்டத்துக்காக பரிஞ்சும் பேசுவாங்க. அந்தமாதிரி அதிகாலை குளிரில் எழுந்து நீராடி வந்திருக்கும் பெண்களுக்கு ஆதரவாக நப்பின்னையை எழுப்புவதாய் அமைந்திருக்கு இப்பாடல்..
திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..