பிரதோஷம் உருவான கதை:
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்திரகிரி மலையை மத்தாக்கி பாற்கடலை கடைய, வலிதாங்காமல் வாசுகி பாம்பு நஞ்சினை கக்கியது. அந்த நஞ்சு, கடலில் கலந்து ஆலகால விஷமாய் மாறி அனைவரையும் அந்த நஞ்சு துரத்தியது.
உயிர் பயங்கொண்டு அங்குமிங்கும் ஓடிய முப்பத்தும்முக்கோடி தேவர்களும், கைலாயம் சென்று சிவபெருமானை வேண்ட, அந்த நஞ்சினை உருட்டி உருண்டையாக்கி விழுங்கினார்.
உலகை காக்க இறைவன் நஞ்சினை விழுங்க, கணவனை காப்பாற்ற நினைத்த உமாதேவி, சிவபெருமானது தொண்டையினை அழுத்தி பிடித்தார். ஆலகால விஷம் சிவபெருமான் தொண்டையிலேயே நின்றது. அன்றிலிருந்து சிவபெருமான் திருநீலகண்டன் ஆனார்.
அப்படி ஆலகால விசத்தை சிவபெருமான் உண்டு அனைவரையும் காப்பாற்றிய நேரம் மாலை 4.30 முதல் 6.00 வரை ஆகும். இதுவே பிரதோஷ நேரமானது.
பிரதோஷ நேரம்:
அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரம்ம முகூர்த்தம் என்பது பலருக்கும் தெரியும். அந்தவேளையில் கண்விழித்து, நீராடி, இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். வாழ்வில் சுபிட்ஷம் உண்டாகும்.
அதேப்போல மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ வேளைன்னு சொல்கிறார்கள். அந்த நேரத்தில் ஆலயம் சென்று சிவபெருமானை வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். தினமும் மாலைவேளையில் வரும் பிரதோஷத்தை தினபிரதோஷம் என்று பெயர்.
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை,தேய் பிறை திரயோதசி ( 13ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்கள். திதி கணக்கு தெரியாதவங்க எளிதாய் நினைவில் வச்சுக்க பௌர்ணமி, அமாவாசை தினங்களுக்கு முதல் நாளுக்கு முதல்நாள் பிரதோஷம் வரும்.
பிரதோஷ விரதமுறை:
பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிறது.
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷத்தில் 20 வகை உண்டு. அதைப்பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
பிரதோஷக்காலத்தில் பார்வதியுடன்கூடிய பிறைசூடிய சிவபெருமான் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். அதில் கலந்துக்கொள்ள வேண்டும். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் கேட்டபடி ஆலயத்தை வலம் வரவேண்டும்.
பிரதோஷவேளையில் கோவிலை வலம் வரும் முறை:
பிரதோஷக்காலத்தில் வலம்வரும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம்ன்னு சொல்வாங்க.
நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாக வலம் வந்து சண்டிகேஸ்வரரை வணங்கி, அங்கிருந்து திரும்பி நந்தியம்பெருமானிடம் வணங்கி, இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து, அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகிவரை வலம் வந்து கோமுகியை வணங்கி, பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்கனும்.
பின்னர் அங்கிருந்து திரும்பி நந்தித்தேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்கனும். இது சோமசூக்த பிரதட்சணம் எனப்பெயர். அதற்கான வரைப்படம்தான் மேல இருக்கும் படம்.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது தேவர்கள் இங்குமிங்கும் அலைந்ததை நினைவுக்கூறும் விதமாக இந்த பிரதட்சணம் செய்யப்படுது. இந்த வலம் வரும் முறைப்படி நாம் வலம் வந்தால் பிரதோஷத்தின் முழுபலனையும் அடைய முடியும்.
பிரதோஷ மகிமை தொடரும்….
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!