ஆஞ்சினேயரின் வடமொழிப்பெயரான ‘ஹனுமான்’ என்ற சொல்லில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரின் தமிழ் வடிவமே ‘அனுமன்.’ வானர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘மாருதி’ என்றும், அஞ்சனை-கேசரி மகன் என்பதால் ‘ஆஞ்சநேயர்’ என்றும் பெயர்பெற்றார்.
ராம அவதார நோக்கத்திற்காக, மகாவிஷ்ணுவுக்கு உதவும்பொருட்டு அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய அவதாரமெடுத்தன. இதைப்பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச்சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில்தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டுமென்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் சிவன் தந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவதரித்தவரே ஆஞ்சநேயர்ன்ற அவதாரம் பற்றி ஒரு கதை சொல்லப்படுது.
ராம அவதாரம் நிகழவிருந்த சமகாலத்தில், அதாவது, குழந்தை பேறின்றி இருந்த தசரதன், புத்திரகாமேட்டி யாகம் செய்து , அதன் பிரசாதமான பாயாசத்தை தசரதன் மனைவிகள் உண்டதின் மிச்சத்தின் ஒரு பருக்கையை கருடன் கொத்திக்கொண்டு சென்று, அஞ்சனையிடம் சேர்க்க, யாகத்தின் பலன் அஞ்சனை, கேசரி தம்பதிக்கும் கிடைத்து மார்கழி மாதத்தின் மூலம் நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, தங்கள் அழகு மகனுக்கு சுந்தரன் என பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். ஒருமுறை அஞ்சனை, உணவூட்ட நேரமானதால், பசி தாங்காத சுந்தரன், அப்போதுதான் முளைத்து வரும் இளஞ்சூரியனை, காவி நிறத்திலான பழம் என எண்ணி, சூரியனை பிடித்து வாயில் போட்டுக்கொண்டாராம். சுந்தரன் வாயிலிருந்து வெளிக்கொணர வேண்டி, தேவேந்திரன் சுந்தரனின் தாடையில் வஞ்ராயுதத்தால் இடித்ததன் விளைவு சுந்தரனின் அழகு முகம் மாறி இப்படி ஆகிவிட்டதெனவும் சொல்லப்படுது. அனுமன் என்ற சொல்லுக்கு வளைந்த தாடையுடைவன்னு பொருளாகும்.
மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டுவந்தது, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டுவந்து ராமருக்கு ஆறுதல் அளித்தது, அசோகவனத்திலிருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டது, ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்புபட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து வந்தது, 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர், நாட்டிற்கு திரும்பிவர தாமதமானதால், தீக்குளிக்கச்சென்ற பரதனை காற்றைவிட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றியதென அனுமனின் பங்கு ராம அவதாரத்தில் அளப்பறியது.
ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தபோதிலும், குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின்மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.
இப்படி விஷ்ணுதாசனாய் பல பெருமைகளைக்கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக நினைத்து மதிப்பு செய்கின்றனர். அதேசமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக்கோவில்கள் அனுமனுக்கு அளவில்லாமல் பார் முழுக்க இருக்கின்றது.
அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தை பெற்ற எழுவரில் ஒருவர். அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.
ராம, கிருஷ்ண, கலியுக அவதாரத்திலும் தனது அருளால் பக்தர்களை இன்னலிலிருந்து காக்கும் அனுமன் ஜெயந்தி வரும் சனிக்கிழமை (5/1/2019)அன்று வருகிறது.
ஜெய் ஸ்ரீராம்!