சஞ்சீவி மலையை சுமந்த, நெஞ்சை கிழிக்கும் கோலத்தில் மட்டுமே நாம அனுமனை தரிசித்திருப்போம். ஆனா, 9வடிவங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்யலாமென ஆகமவிதிகளில் சொல்லி இருக்கு. அவை என்னவென்று பார்க்கலாம்…
பஞ்சமுக ஆஞ்சநேயர்…
ராவணனுக்கும், ராமனுக்குமிடையேயான போரில் ராவணன் நிராயுதபாணியனான். எடுத்த எடுப்பிலேயே எந்த தெய்வமும் தண்டனை கொடுத்துடாது. அதனால், ராவணன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த ராமன், இன்று போய் நாளை வான்னு அவனை அனுப்பினார். ஆனா, ராவணன் அரக்கன் வம்சமாச்சே! அவனாவது திருந்துறதாவது?! அதனால, மயில் ராவணன்ன்ற இன்னொரு அசுரனனோடு கைக்கோர்த்துக்கிட்டு போருக்கு கிளம்பினான். அந்த மயில்ராவணன் ஒரு கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். அந்த யாகம் நடந்தா ராம லட்சுமணர் உயிருக்கு ஆபத்து வரும்ன்னு உணர்ந்த விபீஷ்ணன் ,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும்முன் நரசிம்மர், ஹயக்கிரீவர் , வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற, தங்களின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். ஆஞ்சநேயரும் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் . இவரை வழிபட்டால், நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
நிருத்த ஆஞ்சநேயர்…
போருக்கு கிளம்பும் பாவனையோடுஇருப்பவர். ராம-ராவணனுக்கு இடையேயான போரில், ராமனின் பக்கமிருந்து கடுமையாய் போரிட்டவர் அனுமன். அப்படி உக்கிரமாய் போரிட்ட அனுமனின் தோற்றத்தை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும், எதிரிகள் தொல்லை நீங்கும். இனம்புரியாத பய உணர்ச்சி நீங்கும். தைரியம் பிறக்கும்.
கல்யாண ஆஞ்சநேயர்….
ஆஞ்சநேயர் பிரம்மச்சாரியாதான் நமக்கு தெரியும். ஆனா, அவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் உண்டு. சஞ்சீவி மலையினை கொண்டு வரும் சமயம், கடல்மேல் பறந்துக்கொண்டிருந்த அனுமனின் வியர்வை கடலில் சிந்தி, கடலிலிருந்த கடல்கன்னி ஒருத்தி அதை பருக, அதனால் அவளுக்கு ஒரு மகன் பிறந்ததாகவும், ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும், அவளை மணந்ததாகவும் ஒரு கதை உண்டு. அனுமனின் மனைவி பெயர் சுவர்ச்சலா, அவர் மகனின் பெயர் மகரத்வஜன். மனைவியுடன் அனுமன் இருக்கும் தோற்றமே கல்யாண ஆஞ்சநேயர். இவரை வணங்கினால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். திருமணப்பேறு கிடைக்கும். அனுமன் கல்யாண கதை பத்திய இன்னொரு கதை இங்க இருக்கு.
பால ஆஞ்சநேயர்….
கிருஷ்ண பரமாத்மா போல ஆஞ்சநேயரும் பலவித சேட்டைகள் செய்தாராம். அவர் தாய் அஞ்சனையுடன் இருக்கும் சிறுவயது தோற்றமே பால ஆஞ்சநேயர். இவரை வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
வீர ஆஞ்சநேயர்…
குறும்புத்தனம் நிறைந்த சிறுவயது ஆஞ்சநேயர் ஒருமுறை, தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களின் தவத்தை கலைத்தார். அதனால் கோவம்கொண்ட முனிவர்கள் சாபமிட்டனர். சாபத்தின் காரணமாக தனது சக்தி என்னவென்பதை மறந்தார். ராமர் சந்திப்பு நிகழ்ந்து, கடல் கடந்து இலங்கைக்கு சென்று சீதையை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அனுமனிடம் கொடுக்கப்பட்டது. தன்னால் இது முடியுமாவென அவர் மலைத்திருக்கும்போது, ஜாம்பவான், ஆஞ்சநேயர் பிறப்பு பற்றி கூறி அவரது சக்தியினை அவருக்கு எடுத்துச்சொல்ல, தனது சக்தியினை உணர்ந்த ஆஞ்சநேயர் எடுத்த விஸ்வரூப தோற்றமே வீர ஆஞ்சநேயர். இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை அகலும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.
பக்த ஆஞ்சநேயர்....
கடவுளை மனிதர்கள் வணங்குவது இயல்பு. ஆனா, தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது ஆஞ்சநேயர் மட்டுமே! அப்படி ஏன் வணங்குறார்ன்னா, ஆஞ்சநேயரை வணங்க வந்தாலும் ராமஜெயம் சொல்லித்தான் பக்தர்கள் வணங்குவர். ராமரை ஒலி, ஒளி வடிவில் என எங்கு கண்டாலும் கேட்டாலும் ராமரே அவர்முன் தோன்றுவதாய் ஆஞ்சநேயரது நம்பிக்கை. ராமருக்கு மரியாதை செய்யும் விதமா ஆஞ்சநேயர் வணங்குவார். அவரது கண்ணோட்டத்தில் ராமநாமம் உச்சரிக்கும் நாமும் ராம அவதாரமே! அதனாலதான் நம்மையும் வணங்கும் தோற்றம் உண்டாச்சு. இந்த தோற்றத்துக்கு பக்த ஆஞ்சநேயர் என்று பேரு. இந்த கோலத்திலிருக்கும் அனுமனை பரவலா அதிகம் பார்க்கலாம். இவரை வணங்கினால் எத்தனை பெரிய பதவி வந்தாலும் பணிவோடு நடக்கும் குணத்தை தரும்.
யோக ஆஞ்சநேயர்….
ராமாயணத்தின் முடிவில், தங்களது அவதார நோக்கம் முடிந்ததென ராமர், லட்சுமணர், சீதை உட்பட அனைவரும் தங்களது பூத உடல் நீங்கி வைகுண்டம் சென்றனர். ஆனால், அனுமன் மட்டும் அப்படி போகலை. ராமநாம பூலோகவாசிகளால் உச்சரிப்பதை கண்டு, இங்கயே தங்கியிருந்து மகிழ்ந்திருக்க தான் வரவில்லையென அவர்களோடு செல்ல மறுத்துவிட்டாராம். ராம நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வாறு யோகத்தில் இருக்கும் அவரது தோற்றமே யோக ஆஞ்சநேயர் ஆகும். ராம நாமம் சொல்லி இவரை வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.
சிவ பிரதிஷ்டை ஆஞ்சிநேயர்…..
ராவணனை கொன்றதால ராமருக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்தது. அதனை போக்க, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வைத்து பூஜிக்க வேண்டி, அனுமனிடம் காசிக்கு சென்று சிவலிங்கத்தை எடுத்து வரச்சொன்னார். ஆனா, அனுமன் லிங்கம் கொண்டு வர நேரமானதால், சீதை கடல் மண்ணால் சிவலிங்கத்தை உண்டாக்கி பூஜை செய்து முடித்தனர். காலம் கடந்து வந்த ஆஞ்சநேயர் தன்னால் நேரத்துக்கு வரமுடியவில்லையென தன்னைத்தானே நொந்துக்கொண்டார். அவரது வாட்டத்தை போக்க எண்ணிய ராமர், ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கத்தையும் வைத்து பூஜித்தார். ராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் வணங்கும் கோலமே சிவபிரதிஷ்டை ஆஞ்சநேயர். இவரை வணங்கினால், சகல தோஷமும் நீங்கும்.
சஞ்சீவி ஆஞ்சநேயர்…
ராவணுடனான போரில் ராவணன் விட்ட அம்பு கக்கிய நஞ்சால், ராம லட்சுமணன் மயக்கமுற்றனர். அவர்களது மயக்கத்தை தீர்க்க, சஞ்சீவி மலையிலிருக்கும் குறிப்பிட்ட மூலிகையை பறித்துக்கொண்டு வர ஆஞ்சநேயரை அனுப்பினார் விபீஷ்ணர். சஞ்சீவி மலைக்கு சென்ற ஆஞ்சநேயர் மூலிகை எதுவென தெரியாமல் குழம்ப, நேரம் கடந்து செல்வதை உணர்ந்து, சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்தார். அப்படி மலையும் கையுமாம் இருக்கும் தோற்றமே சஞ்சீவி ஆஞ்சநேயர். இந்த தோற்றமும் பரவலா எல்லா இடத்திலயும் நாம் பார்க்கலாம். இவரை வணங்கினால் நோய் நொடிகள் அண்டாது.
மேற்சொன்ன 9 வடிவங்கள் மட்டுமில்லாம தன் நெஞ்சை கிழித்து ராமர் சீதை இருப்பதை உணர்த்தும் தோற்றமும் பரவலா நாம காண்பது.
ராமஜெயம்! ஸ்ரீராமஜெயம்!!