பாடல்
அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.
விளக்கம்..
அம்மையப்பரே! உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.