ஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..

7b6e67c3804171836fb84deb297b9591-1

பாடல்

ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே
ஒளியிது காப்பருட் கணபதி கழலிணை
தெளிபவ ருளம்வினை சேரா வென்றது.

விளக்கம்

ஒளியான திருமேனி ஞானப்பிரகாசமான திருமேனியிலே, உமிழ்தானம் மிகமேவு களியார வரும் ஆனை பொழியாநின்ற மதத்தினை மிகவும் பொருந்தப்பட்டுக் கர்வமிகுதியாலே யெழுந்தருளா நின்ற யானைமுகத்தினையுடைய மூத்த நாயனார்; கழல் நாளும் மறவாமல் அவனது ஸ்ரீ பாதத்தை நாடோறும் மறவாமல்; அளியாளும் மலர் தூவும் அடியார்கள் வண்டுகளை யாட்சியாகவுடைய பூக்களினாலே அர்ச்சித்து வழிபடுகிற தொண்டராயுள்ளவர்கள்; உளமான வெளியாகும் உள்ளமானது அஞ்ஞானமாகிய இருள்நீங்கிச் சிவஞானம் பிரகாசியாநிற்கும். ஆகையாலே; வலிதாய வினை கூட நினையாவே அவர்களை மிக்க வினைகளானதும் பொருந்த விசாரியாது. இந்நூல் காப்பது நிமித்தமாக வழிபடாநின்றேமென்பது கருத்து.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews