தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடி மாதத்துகென ஒரு பொருளும், அர்த்தமும் உண்டு, ஆடிமாதத்துக்கு ஏன் ஆடி என பெயர் வந்தது என பார்க்கலாம்!!
ஆடி என்ற தேவலோக மங்கை,, சிவன்மீது காதல் வயப்பட்டாள். ஆனாலும், பார்வதி தேவி சிவனை மணந்ததால் தனது ஆசையினை அடக்கி வைத்திருந்தாள். ஒருமுறை, பார்வதிதேவி சிவனை பிரிந்து தவம் செய்ய பூலோகத்தில் இருந்தபோது , ஆடி, பாம்பு உருக்கொண்டு யாரும் அறியாதபோது கயிலாத்திற்குள் நுழைந்தாள். பின் பார்வதிதேவியாக மாறி சிவனை ஆசையோடு நெருங்கினாள். ஆடி, சிவனை நெருங்க நெருங்க ஒருவித கசப்பு சுவையை நாவினில் உணர்ந்த சிவபெருமான் தன்னை நெருங்குவது தன் மனைவி பார்வதிதேவி அல்ல என்பதை புரிந்துகொண்டு கடுங்கோபத்துடன் தனது சூலாயுதத்தால் ஆடியை குத்தி கிழிக்க முயன்றார்.
சூலாயுதத்திலிருந்து வெளிவந்த தீப்பொறிகள் ஆடியை புனிதவளாக ஆக்கியது. ஆடியின் காமம் மறைந்தது. ஈசனை தொழுது நின்ற ஆடி, ஐயனே! ஒருநிமிடமாவது தங்களது அன்பான பார்வை என்மீது படவேண்டுமென இவ்வாறு நடந்துக்கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டுமென வேண்டி நின்றாள். என்ன இருந்தாலும், நீ பார்வதிதேவி உருக்கொண்டு வந்தது தவறு, எனவே, நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாய் பிறப்பாய் என சபித்தார். இதற்கு விமோசனம் என்னவென்று ஆடி கேட்க, கவலைப்படாதே! பார்வதிதேவியின் உருக்கொண்டு வந்ததால் அவளுக்கு ஈடான மரியாதை உனக்கு கிடைக்கும். பார்வதிதேவியின் பரிபூர்ண அருள் உனக்கு கிடைக்கும். உன் நிழலில் தேவி இளைப்பாறுவாள். உன் பெயரிலேயே பூலோகத்தில் ஒரு மாதம் தோன்றும். அது அம்பாளுக்கு உகந்த மாதமாகும் என அருளினார்.
தேவலோக மங்கை ஆடிக்கு சிவன் அளித்த சாபமே அவளுக்கு வரமானது. ஆடி, பூலோகத்தில் தெய்வாம்சம் பொருந்திய சக்தியின் வடிவமான வேம்பாய் நின்றாள். நோய்கள் பலவற்றை நீக்கும் ஆற்றல் இந்த வேம்புக்குண்டு. தீய சக்திகளை அண்டவிடாது. செவ்வாய், வெள்ளியில் வேப்ப மரத்துக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வணங்குவதால் மாங்கல்யபலம் கூடும். வேம்பினைப்போலவே துளசி வழிபாடும் ஆடிமாதத்தில் சிறந்தது.