முன்பெல்லாம் பண்டிகை தினத்தில் பச்சரிசியை ஊறவைத்து மைய அரைத்து நீர்விட்டு கரைத்து வாசல், வீடுகளில் மாக்கோலம் இடுவர். அதேப்பொல் மாவிளக்கும் போடுவது வழக்கம். டைல்ஸ், மார்பிள்ஸ் வந்தபின் அப்படி மாக்கோலம் போடும் முறை வழக்கொழிந்து போனது. ஆனால், மாவிளக்கு போடுவது மட்டும் இன்னும் முற்றிலுமாய் வழக்கொழியவில்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் மாவிளக்கு போடாவிட்டாலும் அம்மன் வழிபாடு நடக்கும் நாட்களிலும், குலதெய்வ வழிபாடு நடக்கும் நாட்களிலும் மாவிளக்கு போடுவது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது.
ஆறு, குளங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் இப்படி மாவிளக்கேற்றி வழிபடுவது இரட்டிப்பு பலனை தரும். பச்சரிசி மாவோடு, வெல்லம், இளநீர் சேர்த்து பிசைந்து மாவிளக்கு போடுவது பண்டைய நாட்களின் பழக்கம். ஆனால் அவசர யுகத்தில் இவ்வழக்கம் மாறிவிட்டது.
அம்மனுக்கு மட்டுமல்லாமல் முக்கோடி கிருத்திகை எனச்சொல்லப்படும் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை நாட்களில் முருகனுக்கும் இப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடுவது சிலரின் வழக்கம்.. இப்படி வீடுகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வறுமை நீங்கும்.
மாவிளக்கின் தத்துவம்..
காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே இந்த மாவிளக்கு உணர்த்துகிறது. அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ரூபம். உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே. வெல்லத்தின் குணம் இனிப்பு. இனிப்புக்கு மதுரம் என்று மற்றொரு பெயருண்டு. அம்பிகையை மதுரமானவள் என புராணங்கள் சொல்கின்றது. அதாவது இனிய குணமுடையவள் என பொருள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள். அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ரூபமாக அம்பிகை நம் வீடுகள்தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம். நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இந்த மாவிளக்கு ஏற்றி வழிபடுவது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இனி மாவிளக்கு செய்முறையை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்..
பச்சரிசி – 1 மடங்கு
பொடித்த வெல்லம் – 1 மடங்கு
நெய் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 2 சிட்டிகை
செய்முறை :
பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீர் நன்றாக வடித்து ஒரு பருத்தி துணியில் நிழலில் காயவைக்கவும்.பின்னர் மாவாக்கி கொள்ளவேண்டும். அந்த மாவை சலித்து, சலித்த மாவில் பொடித்த வெல்லம், நெய் ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து அவரவர் குடும்ப வழக்கப்படி ஒன்று, இரண்டு.. என உருண்டையாக்கவும்.அந்த உருண்டையின் நடுவில் சிறு குழியாக்கி, குழியை சுற்றி மஞ்சள், குங்குமம் இட்டு நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்றி வழி படவும்.
அம்மன் அருள் கிட்ட மாவிளக்கு வழிபாடு செய்வோம்!