ஆம்பூர்ன்னா பிரியாணி, குற்றாலம்ன்னா பார்டர் கடை பரோட்டா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி ஒவ்வொரு ஊருக்கென ஒரு பிரத்யேக உணவு இருக்கும்.சென்னையில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிப்பதால் எல்லா வகையான உணவுகள் கிடைக்கும். சென்னைக்கென பிரத்யாக உணவுன்னா அது வடகறிதான். அதுவும் சைதாப்பேட்டை வடைகறிதான் பிரபலம். 1968ல் வெளிவந்த பொம்மலாட்டம் படத்தில் சோ.ராமசாமியும் மனோரமா பாடும் பாட்டில் சைதாப்பேட்டை வடகறின்னு வரும். சைதாப்பேட்டை பகுதிகளில் இந்த வடைகறி பிரபலம். சென்னையின் பாரம்பரிய உணவான வடைகறி செய்முறையைத்தான் இப்ப பார்க்கப்போறோம்…
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 200 கிராம்
பூண்டு – 4, மிளகாய் வத்தல் – 3
பெருங்காயம் தூள் – ½ டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள்– 1 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 1, தக்காளி – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க: பட்டை, சோம்பு, கடுகு, உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் இல்லாமல் வடித்து, அதனுடன் சீரகம், பூண்டு, வத்தல், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு கலவையில் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பிசைந்து வடைகளாகவோ அல்லது சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து, போட்டு தாளித்து அதனுடன் பட்டை, சோம்பு இலவங்கப்பட்டை இலை மற்றும் கிராம்பு போட்டு பொரிய விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சு பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனப்பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மிளகாய் தூள் வாசனை போனதும் பொரித்து வைத்திருக்கும் வடைகள்/உருண்டைகளை உடைத்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு தேங்காய்பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைச்சு இறக்கி கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கலாம்.
குறிப்பு: எண்ணெயில் வடைகளை பொரிக்காமல், அரைத்த கடலைப்பருப்பு மாவை ஆவியில் வேக வைத்தும் தூளாக்கியும் வடைகறி செய்யலாம்.
இந்த வடைகறியை இட்லி,தோசை,இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்..