இப்படி ஒருமுறை புளியோதரை கிளறி பாருங்க! பெருமாள் கோவில் பிரசாதம் சுவை தெரியும்..

By Staff

Published:

தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா பெருமாள் கோவில்களிலும் புளியோதரைதான் பிரசாதம். ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெரிய பெரிய பெருமாள் கோவிலுக்குள் நுழையும்போதே மணமணக்கும் புளியோதரை வாசம் நம்மை வரவேற்கும். எப்படா தரிசனம் செய்வோம் என மனதில் தோன்றும்.

என்ன பெரிய புளியோதரை?! கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா புளியோதரை ரெடி என நினைப்பவர்களுக்கு…. கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக இருக்க வேண்டும்… என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்… உப்பு சேர வேண்டும்… எண்ணெய் அதிகமாக இருக்கக்கூடாது.. இப்படி இன்னும் எவ்வளவோ சிறு சிறு நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும். கோவிலில் கிடைக்கும் புளியோதரையின் சுவையை வீட்டிலேயே கொண்டு வரமுடியும். அதன் செய்முறை இதுதான்..

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த பச்சரிசி சாதம் –    4 கப்
நல்லெண்ணெய்  –   2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் –   3 கப்
மஞ்சள் தூள்  –  ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு    –  தேவையான அளவு
கட்டி பெருங்காயம் – சுண்டைக்காய் அளவு
கருவேப்பிலை    சிறிது
மிளகாய் வற்றல்  –   2 கப்
கருப்பு எள் –    ஒரு கப்
தனியா    – ஒரு கப்
வெந்தயம்  –   2 டீஸ்பூன்
நிலக்கடலை    – கால் கப்
உளுத்தம் பருப்பு -கால் கப்
கடலைப் பருப்பு  – கால் கப்
கடுகு  – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை..

அரிசியை ஊற வைத்து உப்பு எண்ணெய் சேர்த்து முக்கால் பதத்தில் வேகவைத்து வடித்து ஆற வைக்கவும்.. ஆறிய சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும்

மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அனைத்தையும் இடித்து பொடியாக்கவும்.

அடிக்கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் , காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சிவந்ததும், புளிக்கரைசலை விடவும், அதிலேயே கட்டி பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். புளிக்குழம்பு கொதிச்சு, வாசனை போனதும் எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும். அதில் சிறு துண்டு வெல்லத்தினை சேர்க்கவும். புளிக்கரைசல் ரெடி.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலையை சிவக்க வறுத்து வைக்கவும். ஆறிய சாதத்தில் பொடித்த பொடியையும், வறுத்த பருப்புகளை போட்டு கிளறி விடவும், கடைசியில் ஆறிய புளிக்குழமை ஊற்றி எல்லா சாதத்திலும் படுமாறு கிளறிவிடவும்..

அட்டகாசமான சுவையுடனும், அருமையான மணத்துடனும் பெருமாள் கோவில் புளியோதரை தயார்.

Leave a Comment