சர்க்கரை பொங்கல் என்ற இனிப்போடு தெய்வத்தினை தொழுது புத்தாண்டை வரவேற்பது வழக்கம். சர்க்கரை பொங்கல் செய்முறையினை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கிலோ
பாசிப்பருப்பு – 100 கிராம்
பால் – அரை லிட்டர்
முந்திரி – 15
உலர் திராட்சை – 15
வெல்லம் – 800 கிராம் (பொடித்தது)
நெய் – 200 கிராம்
பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடித்தது)
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் கப்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும். அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு, அரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு நன்கு கிளறவும். வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
வெல்லத்தில் தூசு, கரும்பு சக்கை, மண் துகள் இருப்பதால் வெல்லத்தினை கொஞ்சமாய் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைந்ததும் வெந்த அரிசியில் சேர்க்கலாம். இதே முறையில் வரகரிசி, சாமை, குதிரைவாலி அரிசியிலும் செய்யலாம்.