இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையுடனும், மணத்துடனும் இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால் புது சுவையுடன் இருக்கும்.
தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், ஹோட்டல் தோசைப்போல் இருக்கும்.
இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், வாசனையுடனும் இருக்கும்.
தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தணணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் வடையில் தயிர் நன்றாய் ஊறும்.
ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீ ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாக நீர்த்து போகாமல் இருக்கும்.
முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, எண்ணெயில் முள்ளங்கியை வதக்கி சாம்பாரில் சேர்த்தால் ருசி கூடும்.
கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும்போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும். உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் அதில், சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
பருப்பு வேகவைக்கும்போது சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
மோர் குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
சமையல் குறிப்புகள் தொடரும்….