’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை’ என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார். இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். வணிகத்தில் நல்வழியில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை சிவத்தொண்டிற்கு செல்வழித்தார். அன்னம், வஸ்திரம் தானம் செய்வதோடு கோவணம் தானம் செய்வதை முதன்மையாய் கொண்டிருந்தார்.
சிவனடியார்களுக்கு தொண்டு செய்யவே திருநல்லூர் என்ற ஊரில் சிவமடம் ஒன்றை கட்டி, திருவிழா காலங்களில் தன் குடும்பத்தோடு சென்று இக்கைங்கர்யங்களை செய்து வந்தார். அமர்நீதி நாயனாரின் பெருமையை உலகறிய செய்ய நேரம் வந்ததை உணர்ந்து அந்தணர் குல பிரம்மச்சாரியாய் உருக்கொண்டு கோமணம் மட்டும் அணிந்து இரு கோவணம் முடிந்த தண்டுடன் திருநல்லூரிலிருக்கும் அமர்நீதியார் மடத்திற்கு வந்தார். தன் மடத்திற்கு வந்திருக்கும் சிவனடியாரை இன்முகத்தோடு பாதபூஜை செய்து வரவேற்று, திருஅமுது செய்ய அழைத்தார். அதற்குமுன் தான் நீராட வேண்டுமெனவும், வானம் மப்பும் மந்தாரமுமாய் இருப்பதால் அணிந்துக்கொள்ள வேண்டிய கோவணத்தை தான் எடுத்து செல்வதாகவும், மிச்சமுள்ள மற்றொரு கோவணத்தை அமர்நீதியாரிடம் கொடுத்து தான் நீராடி வரும்வரை பத்திரமாய் வைத்திருக்க சொன்னார். கூடவே கோவணத்தின் அருமை பெருமைகளையும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தும் சென்றார். அமர்நீதியடிகளும் சிவனடியார்களுக்கு தானம் செய்ய வைத்திருந்த உடைகளில் இக்கோவணத்தை பத்திரப்படுத்தாமல் வேறொரு பத்திரமான இடத்தில் வைத்து அதுக்கு காவலும் ஆட்களை நியமித்தும் சென்றார். ஆனால், இறைவன் நுழையமுடியாத இடம் ஏதுமில்லையே! அக்கோவணத்தை இறைவன் மறைய செய்தான்.
சிவனடியார் ரூபத்தில் வந்த ஈசன் காவிரியில் நீராடியும் உடன் மழையில் நனைந்தும் உடல் நடுங்கியபடி வந்ததை கண்டு உடல் துவட்டிக்கொள்ள துண்டொன்றை நீட்டினார். இதெல்லாம் எதற்கு?! எதிர்பாராதவிதமாய் ,மழை வந்ததால் என்னிடமிருந்த கோவணம் நனைந்துவிட்டது. அதனால் உன்னிடமுள்ள கோவணத்தை எடுத்து வாவென கட்டளையிட்டார். கோவணத்தை எடுக்க உள்சென்ற அமர்நீதியார் அங்கு கோவணம் காணாது திகைத்து நின்றார். எங்கு தேடியும் அடியவரது கோவணம் கிடைக்காமல் போகவே, வேறொரு கோவணத்தை எடுத்து வந்து, ஐயா! தாங்கள் எனக்களித்த பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்,. கட்டுக்காவலில் வைத்திருந்த தங்கள் கோவணம் ஏதோ மாயவித்தையால் காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இது மற்ற ஆடையிலிருந்து கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்தது. எனவே தயவுகூர்ந்து அடியேனது பிழையை பொறுத்தருளி இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டி நின்றார்.
அமர்நீதியாரின் பேச்சை கேட்டு சீறி விழுந்தார். ஓ! ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை லாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் ஈசன். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம்?! என் இடுப்பிலிருக்கும் கோவணம் மற்றும் தண்டிலிருக்கும் நனைந்த கோவணத்துக்கு ஈடானது அந்த கோவணம். மழையில் நனைந்த உடம்பு நடுக்கமாய் உள்ளது. தண்டிலிருக்கும் கோவணமும் உதவாது. இப்படியே நடுக்கத்திலிருந்தால் ஜன்னி வந்து சாகவேண்டியதுதான் என கடிந்துக்கொண்டார். ஐயா! தயவுசெய்து என் பிழையை பொறுத்துகொள்க. ஈரத்தால் உங்கள் உடல் தள்ளாடமல் இருக்கவாவது நான் தரும் கோவணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் தண்டிலிருக்கும் கோவணத்தின் எடைக்கு ஈடாய் புது கோவணங்களை தருகிறேன் என பணிந்து மன்றாடினார். சிவனடியாரும் பெரிய மனது செய்து கோவணத்துக்கு ஈடான கோவணத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்தார். துலாக்கோலை கொண்டு வந்து ஒரு தட்டில் அடியவரது கோவணமும், இன்னொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தை வைத்தார். துலாக்கோலில் உள்ள தட்டு அடியவர் பக்கமே தாழ்ந்திருந்தது. மேலும் சில கோவணங்களை தன்பக்கமுள்ள தட்டில் வைத்தார். அப்படியும் அடியவர் பக்கமிருந்த துலாக்கோல் தட்டு தாழ்ந்தே இருந்தது. இப்படியே அமர்நீதியார் தன் இருப்பிலுள்ள அனைத்து கோவணத்தையும் துலாக்கோலில் கொண்டு வந்து வைத்தார். அப்பிடியும் தட்டு கீழிறங்காததால் தன் இருப்பிலுள்ள அனைத்து வெள்ளி, தங்கம், நவரத்திணங்கள் வைத்தும் தட்டு கீழிறங்காமல் இருந்தது.
ஐயா! என்னிடமிருந்த கோவணங்களையும், நல்வழியில் ஈட்டிய பொருளனைத்தும் வைத்தும் உங்கள் கோவணத்துக்கு ஈடாகவில்லை. அதனால், மறையவரே! நானும், என் மனையாளையும் என் மகனையும் துலாக்கோலில் இடுகிறேன். தங்கள் அடிமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்வோமென அமர்நீதியார் ஈசனின் ஐந்தெழுத்து நாமத்தை மனதாற தொழுது துலாக்கோலில் குடும்பத்தோடு நின்றார். இதற்குமேலும் சோதிக்கலாகாது என எண்ணிய அடியாராக வந்த ஈசன் அமர்நீதியார் பக்கமிருந்த துலாக்கோல் இறக்கி, திருநல்லூரில் எழுந்தருளும் அம்மையப்பராக காட்சியளித்து அமர்நீதி நாயனாரையும் அவர்தம் குடும்பத்தாரையும் ஆட்கொண்டார்.
ஆனிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அமர்நீதிநாயனார் குருபூஜை கொண்டாடப்படுது.
நாயன்மார்களின் கதை தொடரும்…