தென்னிந்தியாவில் பாஜகவுக்கு 10 சீட்டு கூட வராது.. லேட்டஸ்ட் சர்வேயில் அதிர்ச்சி தகவல்.. கேரளா, தெலுங்கானா, கர்நாடகத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் தவெக.. நான்குமே பாஜகவை கடுமையாக எதிர்க்கும் அரசுகள்.. இந்த நேரத்தில் பாஜக 2 விஷயங்களை திட்டமிட்டுள்ளது.. ஒன்று டீலிமிட்டேஷன்.. இதை நிறைவேற்றிவிட்டால் வட மாநிலங்களை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம்.. இரண்டு ஒரே நாடு ஒரே தேர்தல்.. இதை நிறைவேற்றினால் தென்மாநிலங்களில் ஆட்சியை மாற்ற முயற்சிக்கலாம்.. குறைந்தபட்சம் தெலுங்கானா, கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.. ஆட்டத்தை தொடங்குவாரா அமித்ஷா?
தென்னிந்தியாவில் பாஜகவின் அரசியல் கணக்கு எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லையா? அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், தேர்தல் முடிவுகள், மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் என அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, தெற்கில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவால் உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “தென்னிந்தியாவில் பாஜகவுக்கு 10 சீட்டு கூட வராது” என்ற அதிர்ச்சி கணிப்பை முன்வைக்கும் சர்வே தகவல்கள் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசியல் வலிமையும், தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசியல் சூழலும் பாஜகவுக்கு நேரடியான சவாலாக பார்க்கப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவை மீண்டும் பெரிய அளவில் கைப்பற்ற வேண்டும் என்றால், வழக்கமான தேர்தல் பிரசாரத்தை தாண்டி நீண்டகால அரசியல் திட்டம் தேவை என்பதே பாஜகவின் கணக்காக இருக்கலாம்.
இந்த பின்னணியில்தான் டீலிமிட்டேஷன் விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கை தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது தென் மாநிலங்களின் முக்கிய வாதமாக உள்ளது. தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென் மாநில தலைவர்கள் இதுகுறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரசியல் கணக்கில் பார்த்தால், டீலிமிட்டேஷன் என்பது வெறும் தொகுதி மறுவரையறை மட்டுமல்ல. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் எடை மாறக்கூடிய மிகப்பெரிய அரசியல் நடவடிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் அதிகரித்தால், வட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில கணக்கீடுகளில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கூடுதல் இடங்களை பெறக்கூடும் என்றும், சில தென் மாநிலங்கள் இடங்களை இழக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு சாதகமானது.
அடுத்ததாக பாஜக வலியுறுத்தி வரும் மற்றொரு முக்கிய விவகாரம் “ஒரே நாடு, ஒரே தேர்தல்”. நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை அமலுக்கு வந்தால், தேசிய அளவில் வலுவான அமைப்பு, வளம், பிரசார இயந்திரம் கொண்ட கட்சிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையலாம் என்ற அரசியல் பார்வையும் உள்ளது.
அதனால், தெற்கில் பாஜகவுக்கு எதிரான அலை நீடித்தாலும், தேர்தல் முறையிலும் தொகுதி அமைப்பிலும் ஏற்படும் மாற்றங்கள் மூலம் அரசியல் சமன்பாட்டை மாற்ற முடியுமா என்பதே இப்போது எழும் கேள்வி. குறிப்பாக கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்பதும் பாஜகவின் நீண்டகால வியூகத்தில் முக்கிய இடம் பெறலாம்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை எப்படி தொடங்கப்போகிறார் என்பதே டெல்லி முதல் சென்னை வரை பேசப்படும் கேள்வியாக உள்ளது. தென்னிந்தியாவில் 10 சீட்டுக்குள் முடங்குமா பாஜக? அல்லது டீலிமிட்டேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பெரிய அரசியல் நகர்வுகள் மூலம் அந்த கணக்கையே மாற்றுமா? அடுத்த சில ஆண்டுகளில் இதற்கான விடை தெளிவாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
