தமிழக அரசியலில் நீட் தேர்வை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டங்களும், அதன் பின்னணியில் இயங்கும் அரசியல் இயக்கங்களின் உள்நோக்கங்களும் தற்போது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளன. அமீர் முதல் வெற்றிமாறன் வரை பலதரப்பட்ட பிரபலங்களும் சினிமா கலைஞர்களும் இணைந்து நடத்திய போராட்டக் குழுவின் நடவடிக்கைகள், நீட் தேர்வு குறித்த உண்மையான அக்கறையை விட அரசியல் ஆதாயங்களை நோக்கியே நகர்ந்தன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தின. இந்த ஆர்ப்பாட்ட மேடைகளில் நீட் தேர்வின் பாதகங்களை விளக்கி ஆக்கப்பூர்வமான தீர்வுகளைப் பேசுவதை விட, முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த நகர்வுகளைத் தமிழக அரசு ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையில் பொறுத்துக்கொண்டது என்றாலும், எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு உண்டு என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
இந்த போராட்டங்களின் உண்மையான சூத்திரதாரிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் பின்புறமிருந்து இயக்கியது என்பது அரசியல் பார்வையாளர்கள் பலராரும் அறிந்ததுதான். மாணவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் தங்களது அரசியல் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள முயன்ற திமுகவின் இந்த நாடகத்தையும் அரசு கண்டும் காணாமல் இருந்தது. ஆனால், போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான்பூச்சி அமைப்பினரே ஒரு கட்டத்தில் தாங்களாகவே போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொண்டதாக அறிவித்தனர். இந்தச் சூழலில், எஞ்சிய சில சக்திகள் மீண்டும் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துவோம், நீட் ரத்து செய்யப்படும் வரை ஓய மாட்டோம் என்று கூறுவது பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் தேவையற்ற நடவடிக்கையாகும். இதைத் தமிழக அரசு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதும், உடனடியாகக் கண்டித்து ஒதுக்க வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகும்.
நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கல்விப் பட்டியலின் கீழ் வரும் அகில இந்தியத் தேர்வு முறை என்பதால், அதனை ஒரு மாநில அரசால் சட்டப்பூர்வமாக ரத்து செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும். கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் மாணவர்களை ஏமாற்றும் நோக்கில் நீட்டை ஒரே கையெழுத்தில் ஒழிப்போம் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முந்தைய ஆட்சியாளர்களைப் போல மக்களை ஏமாற்றும் போலி வாக்குறுதிகளை வழங்க மாட்டார் என்பதில் உறுதியாக உள்ளார். எதார்த்த நிலையை உணர்ந்து செயல்படும் ஒரு தலைவரிடம் இது போன்ற பிடிவாதப் போராட்டங்களை நடத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.
தொடர்ந்து போராட்டங்களை நீட்டிப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். மாணவர்களின் எதிர்காலத்தைக் பணயம் வைத்துச் செய்யப்படும் இது போன்ற அரசியல் நாடகங்களை இனிமேலும் கைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு மேலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டால், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு தனது இரும்புக்கரத்தைக் கொண்டு அவற்றை அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை. சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைப் போராட்டக்காரர்களும் அவர்களை இயக்குபவர்களும் உணர்ந்து கொள்வது அவசியமானதாகும்.
இன்றைய இளைய சமுதாயமும், மருத்துவக் கனவோடு கடினமாக உழைக்கும் மாணவர்களும் இனியாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுயநலத்துக்காகவும், தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும் மாணவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். உண்மை நிலையை உணர்ந்து, மற்றவர்களின் தூண்டுதலுக்கு ஆளாகாமல், தங்களது பொன்னான கல்வியிலும் எதிர்காலத்திலும் மட்டுமே மாணவர்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஒருபோதும் தீர்வைத் தராது, மாறாகத் தொடர் கல்வியும் கடின உழைப்புமே அவர்களின் இலக்கை அடைவதற்கான ஒரே வழியாகும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
