சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா இருப்போம், சாக்கடை முன்னாடி இல்லை.. ‘ஜனநாயகன்’ படத்தை நெட்ல ரிலீஸ் பண்ணிட்டு தலைமறைவா இருந்தா விட்ருவோமா? இந்த ‘வேட்டைக்காரன்’ ஆட்சியில தப்பு செஞ்சவன் ஒருத்தனும் தப்பிக்க முடியாது.. இதுவரைக்கும் மாட்டினவங்க எல்லாம் அடியாட்கள்.. இப்போ கைது செய்யப்பட்டவர்கள் பைரசி திருடர்களின் தலைவன்.. டோட்டல் நெட்வொர்க்கையும் வளைச்சு பிடிச்சாச்சு.. இனிமேல் சினிமாக்காரங்க நிம்மதியா இருப்பாங்க..

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்கள் நடிப்பில் இன்னும் வெளியாகாமல் இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக இணையதளத்தில் கசியவிடப்பட்டு, பரப்பப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரியை தமிழ்நாடு சைபர் க்ரைம்…

jananayagan

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்கள் நடிப்பில் இன்னும் வெளியாகாமல் இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக இணையதளத்தில் கசியவிடப்பட்டு, பரப்பப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரியை தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்து வந்த இந்த முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில், அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் அவர் தற்பொழுது காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 11.04.2026 அன்று குற்ற எண் 47/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. படத்தின் காட்சிகளை அனுமதியின்றி திருடி, நகலெடுத்து இணையதளங்களில் பரப்பியதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அளவிலான நிதி மற்றும் வணிக ரீதியான இழப்புகள் ஏற்பட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, சைபர் க்ரைம் தலைமையகத்தின் எஸ்பியின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், போலீசார் இந்த வழக்கின் விசாரணையை முடுக்கிவிட்டனர். விரிவான டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு அதிநவீனத் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த திரைப்படத் திருட்டு நெட்வொர்க்கில் தொடர்புடைய 17 குற்றவாளிகள் ஏற்கனவே விசாரணையின் வெவ்வேறு கட்டங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும், இந்த ஒட்டுமொத்தக் குற்றச்சம்பவத்திற்கும் பின்னணியில் இருந்து இயக்கிய முக்கிய தலைவன் தொடர்ந்து சட்ட அமலாக்க முகமைகளிடம் சிக்காமல் போக்கு காட்டி, நீண்ட நாட்களாக தலைமறைவாகவே இருந்து வந்தான். அவனை கைது செய்ய போலீசார் தீவிரமான தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கள நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, கடந்த 10.06.2026 அன்று அந்த முக்கிய சூத்திரதாரியும், அவனுடன் சேர்ந்து இந்த திரைப்படத் திருட்டு நெட்வொர்க்கில் செயல்பட்ட மற்றொரு கூட்டாளியும் சைபர் க்ரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த இரு கைதுகளின் மூலம், ‘ஜனநாயகன்’ திரைப்பட கசிவு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, கம்போடியா நாட்டிற்கு இந்தியர்களை ஏமாற்றி அனுப்பி சைபர் குற்றக் கும்பல்களிடம் அடிமைகளாக விற்கும் மற்றொரு விவகாரத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளையும் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு வெவ்வேறான வழக்குகளிலும் தற்பொழுது அடுத்தகட்ட மேல்விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து, சைபர் க்ரைம் பிரிவின் டிஜிபி பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இணையதளங்களில் சட்டவிரோதமாக கசியவிடப்படும் திரைப்பட திருட்டு உள்ளடக்கங்களை பொதுமக்கள் யாரும் பதிவிறக்கம் செய்யவோ, ஆன்லைனில் பார்க்கவோ அல்லது மற்றவர்களுக்கு பகிரவோ கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இத்தகைய டிஜிட்டல் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடுமையான சட்டரீதியான விளைவுகளையும், தண்டனைகளையும் தேடித்தரும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.