திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுகிறாரா? ஜெயித்தால் துணை முதல்வர் பதவியா? விசிகவை நிரந்தரமாக கூட்டணியில் வைக்க விஜய் போடும் திட்டமா? பதவியும் கிடைக்குது, மரியாதையும் கிடைக்குது தவெகவில்.. இது ரெண்டும் திமுக கூட்டணியில் இல்லையே.. மாற்றி யோசிக்கிறாரா திருமாவளவன்?

தமிழக அரசியலில் தற்போது மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் விவாத பொருளாக மாறியிருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இடையேயான அரசியல் நகர்வுகள் தான்.…

thirumavalavan2

தமிழக அரசியலில் தற்போது மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் விவாத பொருளாக மாறியிருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இடையேயான அரசியல் நகர்வுகள் தான். குறிப்பாக, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திருமாவளவன் போட்டியிட போகிறாரா, அப்படி அவர் அங்கு களம் கண்டு வெற்றி பெற்றால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன. தவெக தலைமையிலான புதிய அரசியல் சூழலில், பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடித்துவரும் விசிக, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை நோக்கிச் சிந்திக்க தொடங்கியுள்ளதா என்ற கேள்வியும் இதன் மூலம் பலமாக எழுந்துள்ளது.

நீண்டகாலமாக தங்களுக்கு உரிய அங்கீகாரமும், அதிகார பகிர்வும் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி விசிக தொண்டர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே இருந்து வருவதை மறுப்பதற்கில்லை. திமுக கூட்டணியில் தங்களுக்கு கொள்கை ரீதியான மரியாதை கிடைத்தாலும், ‘அதிகாரத்தில் பங்கு’ என்ற விசிகவின் நீண்டநாள் கோரிக்கை இன்னும் நிறைவேறாத ஒன்றாகவே நீடிக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் தவெக தலைவர் விஜய், விசிக போன்ற வலுவான அடித்தளத்தை கொண்ட ஒரு கட்சியை தங்களோடு நிரந்தரமாக கூட்டணியில் இணைத்து கொள்ளப் புதிய வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அல்லது அடுத்தகட்ட அரசியல் களத்தில் திருமாவளவனை முன்னிறுத்தும் பேச்சுகள் எழுந்துள்ளன. அங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தவெகவின் புதிய ஆட்சியில் அல்லது அரசியல் கூட்டணியில் அவருக்கு மிக முக்கிய பொறுப்பான ‘துனை முதல்வர்’ பதவி வழங்கப்படலாம் என்ற சலுகை ஆசை காட்டப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமல்லாமல், விசிகவை தவெக பக்கம் நிரந்தரமாக ஈர்ப்பதற்கான விஜய்யின் ஒரு மாஸ்டர் பிளான் என்றும் விவாதிக்கப்படுகிறது.

ஏனெனில், தவெக தரப்பில் புதிய கூட்டணி மற்றும் புதிய ஆட்சி அமைப்பில் தோழமை கட்சிகளுக்கு அதிகாரத்தில் உரிய பங்கும், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய மரியாதையும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இது விசிகவின் அடிப்படை லட்சியமான ‘அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இதனால், தவெகவில் இணையும் போது தங்களுக்கு பதவியும் கிடைக்கும், அதே நேரத்தில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக உரிய மரியாதையும் கிடைக்கும் என்ற கணக்கு விசிக வட்டாரத்தில் உலா வருகிறது.

மறுபுறம், திமுக கூட்டணியில் நீண்டகாலமாக நீடித்த போதிலும், தேர்தல் நேரங்களில் தொகுதி பங்கீட்டிற்காக கடுமையான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய சூழலே விசிகவிற்கு நிலவுகிறது. மேலும், திமுக தனி பெரும்பான்மையுடன் இருக்கும் வரை விசிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு துணை முதல்வர் போன்ற உயரிய பதவிகளையோ அல்லது அமைச்சரவையில் பங்கையோ வழங்குவது சாத்தியமில்லாத ஒன்றாகவே தொடர்கிறது. இதனால், தங்களை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே திமுக பயன்படுத்துகிறதா என்ற ஆதங்கம் விசிகவின் தரைமட்ட தொண்டர்களிடம் அவ்வப்போது வெடிப்பது வழக்கம்.

இந்த முரண்பாடுகளை எல்லாம் கவனித்து வரும் தொல். திருமாவளவன், தற்போதைய புதிய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றி யோசிக்க தொடங்கியுள்ளாரா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. தனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது போன்ற கேள்விகளுக்கு அவர் நேரடியாப் பதிலளிக்காமல் தவிர்த்தாலும், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தவெகவுடனான ஒரு மறைமுக பிணைப்பை அவர் முற்றிலுமாக மறுக்கவில்லை. அதிகார பகிர்வை நிஜமாக்கும் கூட்டணி எதுவோ, அதை நோக்கி விசிக நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.