தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றத்திற்கான விதையைத் தூவிய 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாய்ந்ததுதான். திராவிட கட்சிகளின் பிடியில் இருந்த தமிழகத்தை விடுவிக்க புதிய சக்திக்கு ஆதரவு தேவைப்பட்ட வேளையில், திருமாவளவன் வழங்கிய அந்த நிபந்தனையற்ற ஆதரவு வெறும் அரசியல் நகர்வு மட்டுமல்ல, அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம். அன்று விஜய் சொன்ன வார்த்தைகள் இன்று அச்சுப்பிசகாமல் உண்மையாகி இருப்பதே தற்போது தமிழகத்தின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு நாம் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் உரையாற்றினார். அந்த விழாவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சூழலில், அப்போதைய அரசியல் கூட்டணி காரணங்களால் அவரால் வர முடியாமல் போனது. திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த விசிகவிற்குப் பெரும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அந்த மேடையில் பேசிய விஜய், திருமாவளவன் வராததற்கான காரணத்தை மிக நாசுக்காகவும் அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்தார்.
அந்த விழாவில் பேசிய விஜய், “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களால் இன்று இங்கு வர முடியாமல் போயிருக்கலாம். அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக்கூட வர முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அவருக்கு எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால், ஒன்றை மட்டும் நான் இப்போது இங்கே உறுதியாக சொல்கிறேன்… அவருடைய மனசு முழுக்க முழுக்க நம்மளோடு தான் இருக்கும்” என்று ஒரு மிகப்பெரிய கருத்தை முன்வைத்தார். அன்று விஜய் சொன்ன அந்த வார்த்தைகள் பலரால் வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சாகவே பார்க்கப்பட்டது; ஆனால், அந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருந்த ஆழமான அரசியல் கணிப்பு இன்று உண்மையாகியுள்ளது.
இதோ 2026 மே 9-ஆம் தேதி, தமிழகம் ஒரு இக்கட்டான அரசியல் சூழலை சந்தித்து கொண்டிருக்கிறது. ஆளுநரின் மௌனம் மற்றும் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக பரபரப்பு நிலவும் வேளையில், திருமாவளவன் மிக தைரியமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கும் தவெக-வை ஆட்சி அமைக்க அனுமதிப்பதே ஜனநாயகம்; அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட சதி” என்று கூறி ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தன் மீதான அழுத்தங்களை தூக்கியெறிந்துவிட்டு, மாற்றத்திற்காக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது, அன்று விஜய் சொன்ன “அவர் மனசு நம்மளோடு தான் இருக்கும்” என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
விஜய்யின் அந்த தீர்க்கதரிசனம் இன்று திராவிட கோட்டைகளை அசைத்து பார்த்துள்ளது. பதவிக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ இல்லாமல், ஒரு மாற்றத்திற்காக திருமாவளவன் எடுத்த இந்த முடிவு, விஜய்யின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அன்று அம்பேத்கர் விழாவில் விதைக்கப்பட்ட அந்த புரிதல், இன்று தமிழகத்தின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் அஸ்திவாரமாக மாறியுள்ளது. “அன்றே சொன்னார் விஜய்” என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த இரண்டு தலைவர்களின் கைகோர்ப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் நேர்மையான பாதையைத் திறந்துவிட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
https://x.com/Suresh199104/status/2052782441908289593
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
