தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அதிகார போட்டியை சந்தித்து வருகிறது. 2026 தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு மிக அவசியமாகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, விசிக தலைவர் திருமாவளவன் ‘அதிகாரத்தில் பங்கு’ அல்லது ‘சுழற்சி முறையில் முதல்வர் பதவி’ போன்ற நிபந்தனைகளை முன்வைத்ததாக தகவல்கள் கசிந்தன. பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பழகிய விசிக, முதல்முறையாக ஒரு புதிய சக்தியிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமாவளவனின் இந்தத் திடீர் ‘டிமாண்ட்’ தவெக தலைவர் விஜய்க்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருதே அதிகாரத்தை பங்கு கொள்ள விஜய் விருப்பப்பட்டாலும், இரண்டு எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள திருமாவளவனின் அழுத்தம் அதிகரித்த வேளையில், கொள்கையிலும் தலைமையிலும் சமரசம் செய்ய விரும்பாத விஜய், “உங்கள் ஆதரவே தேவையில்லை, வேண்டுமானால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வரட்டும்; நான் மீண்டும் மக்களிடமே செல்கிறேன்” என்று அதிரடியாக ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த ‘கெத்து’ கலந்த அறிவிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தலைவர்களை நிலைகுலைய செய்தது.
விஜய்யின் இந்த விட்டுக்கொடுக்காத மனப்போக்கு மற்றும் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதன் பழி தங்கள் மீது விழும் என்ற அச்சம் விசிக தலைமையை பீடித்தது. ஒரு புதிய மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்திருக்கும் நிலையில், ஆட்சி அமைய தடையாக இருந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தங்களை துடைத்தெறிந்து விடுவார்கள் என்பதை திருமாவளவன் உணர்ந்தார். இதையடுத்து, முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் உடனடியாக திரும்ப பெற்றுக்கொண்டு, தவெக ஆட்சி அமைக்கத் தாங்கள் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ வழங்குவதாக விசிக தரப்பிலிருந்து அவசர அவசரமாக அறிவிப்பு வெளியானதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த திடீர் மாற்றமே விஜய்யின் அரசியல் ஆளுமைக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், அதிமுக, திமுக இணைந்து திருமாவளவனை முதல்வராக்க திமுகவின் சில சக்தி வாய்ந்த நபர்கள் திட்டமிட்ட நிலையில் அதிமுக தரப்பு அதை வன்மையாக எதிர்த்தது. அதிமுக-வின் ஒரு பிரிவினர் விஜய்யின் ஆட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்க தயாராக இருந்த போதிலும், திருமாவளவன் அதிகார பகிர்வில் முக்கிய பொறுப்பிற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. “விஜய்யை ஒரு மாற்றமாக ஏற்கலாமே தவிர, திருமாவளவனை முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ ஏற்பது என்பது சாத்தியமற்றது” என்று அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இது திருமாவளவனுக்கு பலமுனை அழுத்தத்தை ஏற்படுத்தியதுடன், அவரது கோரிக்கையை கைவிட வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கியது.
இறுதியாக, அனைத்து அரசியல் முட்டுக்கட்டைகளையும் தாண்டி, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கான இறுதி அத்தியாயம் தொடங்கியுள்ளது. விஜய்யின் நிலைப்பாடும், விசிக-வின் நிபந்தனையற்ற ஆதரவும் ஆளுநர் மாளிகையை நோக்கி பெரும்பான்மை பட்டியலை நகர்த்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
