யார் ஆட்சி அமைக்கணும்னு மக்கள் முடிவெடுத்துட்டாங்க… ஆனா யார் கூட சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு விஜய் தான் முடிவெடுக்கனும்.. தமிழ்நாடு இப்ப ‘தொங்கு’ சட்டசபை இல்ல… எல்லா கட்சிகளோட ‘தூக்கத்தை’ தொங்கவிட்ட சட்டசபை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பல்வேறு முகமைகள் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, தவெக, திமுக மற்றும் அதிமுக…

stalin udhayanidhi vijay eps

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பல்வேறு முகமைகள் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை இந்த கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. திராவிட பேரியக்கங்களின் கோட்டையாக கருதப்படும் தமிழகத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஒரு மிகப்பெரிய ‘டிஸ்ரப்டர்’ ஆக உருவெடுத்துள்ளதை காண முடிகிறது.

சில கணிப்புகள் தவெக-விற்கு 95 இடங்கள் வரை கிடைக்கும் என்று சொல்வது, தமிழக வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது. அதே சமயம், ஆளுங்கட்சியான திமுக 90 இடங்களை பிடிக்கும் என்ற கணிப்பு, அரசு மீதான அதிருப்தி ஓரளவுக்கு இருந்தாலும் அது அடியோடு அக்கட்சியை வீழ்த்தவில்லை என்பதையும் உணர்த்துகிறது.

இந்த தேர்தல் முடிவுகளில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுவது, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் எட்ட முடியாத சூழல் நிலவுவதுதான். முதலாவது இடத்தை பிடிக்கும் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கொண்டிருக்காது என்பதால், தமிழக அரசியலில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அல்லது வெளியிலிருந்து ஆதரவு என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

திமுக தனது கோட்டையை தக்கவைக்க போராடும் நிலையில், 43 இடங்கள் வரை கணிக்கப்பட்டுள்ள அதிமுக, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும். ஆனால், எக்சிட் போல் முடிவுகளின்படி தவெக ஒரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு யாருடன் கைக்கோர்ப்பார் என்பது பெரும் புதிராகவே உள்ளது. திமுக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்துள்ள தவெக, அதே திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே சமயம், அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் இணைந்தால் மட்டுமே ஒரு நிலையான அரசை அமைக்க முடியும் என்ற சூழல் உருவானால், ஈபிஎஸ் மற்றும் விஜய் இடையே ஒரு புதிய அரசியல் புரிதல் உருவாக வாய்ப்புள்ளது.

ஆனால், இவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், தமிழகம் ஒரு அரசியல் முட்டுக்கட்டையை சந்திக்கும் அபாயம் உள்ளது. இது இறுதியில் ஆளுநர் ஆட்சி அல்லது சில மாதங்களிலேயே மறுதேர்தல் என்ற நிலைக்குக் கூட தள்ளப்படலாம். இந்த எக்சிட் போல் முடிவுகளில் இருக்கும் முரண்பாடுகளை பார்க்கும் போது, சில முகமைகள் தவெக-விற்கு அதிக இடங்களை கொடுப்பதையும், வேறு சில முகமைகள் திமுகவின் ‘வெல்பேர் ஸ்கீம்’ மற்றும் ‘ரெசிடுவல் இன்ஃப்ளுயன்ஸ்’ காரணமாக அதுவே மீண்டும் முன்னிலை பெறும் என்று சொல்வதையும் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக தொகுதி மறுவரையறை போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் மனநிலை ஆகியவை இந்த தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு புதிய கட்சி உருவான ஓரிரு மாதங்களிலேயே 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை பெறுவது என்பது தேர்தல் வரலாற்றில் அரிதானது என்பதால், இந்த எக்சிட் போல் முடிவுகள் உண்மையிலேயே மக்களின் மனநிலைய பிரதிபலிக்கிறதா அல்லது ஒரு ‘இம்பல்சிவ் போலிங்’ முறையா என்ற விவாதம் வலுத்துள்ளது.

இறுதியாக, மே 4-ஆம் தேதி அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும்போது மட்டுமே தமிழகத்தின் உண்மையான அரசியல் சித்திரம் தெரியவரும். காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளுமா அல்லது தற்போதைய கூட்டணிகள் சிதறுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

எது எப்படியிருப்பினும், தமிழக மக்கள் ஒரு தெளிவான மாற்றத்தையோ அல்லது ஒரு அதிகார பகிர்வையோ விரும்புகிறார்கள் என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது. தவெக மற்றும் அதிமுக இணையுமா அல்லது திமுக தந்திரமான வியூகங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவை நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது..